மதுரை: குப்பை கிடங்கு அருகே தேனி அரசு சட்டக் கல்லூரி அமைந்திருப்பது தொடர்பாக பார் கவுன்சில் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டம் ராசிங்காபுரம் சிலமலையைச் சேர்ந்த மகேந்திரன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: தேனி மாவட்டம் தப்புக்குண்டு சாலையில் அரசு சட்டக்கல்லூரி கட்டப்பட்டுள்ளது. இங்கு 700 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
கல்லூரி அருகில் தேனி அல்லிநகரம் நகராட்சியின் நவீன கலவை உரக்கிடங்கு செயல்பட்டு வருகிறது. இங்கு கொட்டப்படும் கழிவுகளிலிருந்தும், கழிவுகள் எரிக்கப்படுவதால் உருவாகும் புகையால் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். கல்லூரியின் விடுதியில் தங்கிப் பயிலும் மாணவர்கள் அடிக்கடி உடல் நல குறைவால் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, தேனி அரசு சட்டக் கல்லூரியின் அருகே அமைந்துள்ள தேனி அல்லிநகரம் நகராட்சி நவீன கலவை உரக்கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியாகௌரி விசாரித்தனர். பின்னர் நீதிபதிகள், தேனி சட்டக் கல்லூரி முதல்வர் குப்பை கிடங்கால் ஏற்படும் பாதிப்புகளை குறிப்பிட்டும், அதை வேறு இடத்திற்கு மாற்றக் கோரியும் 2023 ஜூலை முதல் தொடர்ச்சியாக புகார் மனு அனுப்பியுள்ளார். இருப்பினும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தேனி அரசு சட்டக் கல்லூரியின் சுற்றுச்சுவரை விட உயரமாக குப்பைகள் குவிக்கப்பட்டுள்ளன.
தேனி மாவட்ட நீதித்துறை நடுவர் ஆய்வு செய்து தாக்கல் செய்த அறிக்கையில், குப்பை கிடங்கு அருகில் சட்டக்கல்லூரி மட்டுமில்லாமல், வேறு இரு கல்வி நிறுவனங்களும் செயல்படுகிறது. அப்பகுதியில் உள்ள தண்ணீர் எதற்கும் பயன்படாத வகையில் உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.
இந்திய பார் கவுன்சில் ஒரு குழு அமைத்து, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர்களுடன் இணைந்து சட்டக்கல்லூரி அமைந்துள்ள பகுதியை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். சட்டக்கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குவதில் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் பொறுப்புகளை தெரிவிக்க வேண்டும்.தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் சட்டக் கல்லூரி அமைந்துள்ள பகுதியில் காற்று மற்றும் தண்ணீரின் தரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். சட்டக் கல்லூரி இடம் யாரால் தேர்வு செய்யப்பட்டது என்பதை அரசு தெரிவிக்க வேண்டும். விசாரணை செப். 23-க்கு ஒத்திவைக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.