தேனி: தைப் பொங்கலுக்காக கரும்புகளில் முதற்கட்ட சோகை உரிப்பு பணி மும்முரம்!


கரும்புகளின் அடிச்சோகைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளி. படம்: என்.கணேஷ்ராஜ்.

சின்னமனூர்: தைப் பொங்கலுக்காக தேனி மாவட்டத்தில் கரும்பு விவசாயம் பரவலாக நடைபெற்று வருகிறது. தற்போது பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் முதற்கட்ட சோகை உரிக்கும் பணி தொடங்கி உள்ளது.

ஆண்டுதோறும் தை முதல்நாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வழிபாட்டில் பிரதானமாக கரும்பு இடம்பெற்று வருகிறது. இதற்காக இந்நாளை கணக்கிட்டு தேனி மாவட்டத்தில் பரவலாக கரும்புகள் பயிரிடப்பட்டுள்ளன. குறிப்பாக பெரியகுளம், சின்னமனூர், தேவதானப்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளிலும் கரும்பு விவசாயம் அதிகம் நடைபெற்று வருகிறது.

கடந்த மே மாதம் நடவு செய்யப்பட்ட இப்பயிர் நன்கு வளர்ந்துள்ளன. தற்போது அடிப்பகுதியில் ஏராளமான சோகைகள் உள்ளதால் இவற்றை நீக்கி மேல் பகுதியில் உள்ள சோகைகள் கட்டப்பட்டு வருகின்றன. தொடர்ந்து கரும்பின் அடிப்பகுதியில் மண் மேவும் பணியும் நடைபெற உள்ளது.

விவசாய தொழிலாளி நாகராஜ்

இது குறித்து விவசாய தொழிலாளி நாகராஜ் என்பவர் கூறுகையில்,"பக்கவாட்டில் சோகை அதிகம் இருந்தால் கரும்பு நேராக வளராது. ஆகவே அடிச்சோகைகளை நீக்கி மேல் நோக்கி வளரும் வகையில் கட்டி வைப்போம். அடுத்தடுத்து இன்னும் 2 மாதங்களில் கழுத்துச் சோகை, தலைச் சோகை உரிப்பு நடைபெறும். இதன் மூலம் கரும்புத் தோட்டத்துக்குள் எளிதாக செல்லவும், பயிர் நேராக வளரவும் செய்யும். டிசம்பர், ஜனவரியில் கரும்புகள் மகசூலுக்கு வரும்" என்று விவசாய தொழிலாளி கூறினார்.

தற்போது பெரியகுளத்தில் 43.95 ஏக்கர் அளவிலும், தேனியில் 5.90 ஏக்கரிலும், சின்னமனூரில் 56.17 ஏக்கர் என்று மாவட்டத்தில் மொத்தம் 106 ஏக்கர் பரப்பளவில் சோகை உரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

கரும்பின் அடிச்சோகைகளை அகற்றி மேல்பக்க சோகைகள் முடிச்சிடப்பட்டு தண்ணீர் பாய்ச்சலுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள கரும்புத்தோட்டம். படம்:என்.கணேஷ்ராஜ்

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், "கீழ் பகுதியில் உள்ள தேவையற்ற சோகைகள் உரிக்கப்படுவதால் நீர் மேல் நோக்கி சென்று பயிர் நன்கு வளர்ச்சி அடையும். இந்த ஆண்டு விளைச்சல் நன்றாக உள்ளது. சோகை உரிப்புப் பணியினால் கூலி ஆட்களுக்கும் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது" என்று விவசாயிகள் கூறினார்.

x