ராகுல் யாத்திரையில் ஆம் ஆத்மி... குஜராத் பொதுக்கூட்டத்தில் கேஜ்ரிவால் இணைந்து கலக்க முடிவு!


ராகுல் காந்தி யாத்திரை

குஜராத்தில் நாளை நடைபெற உள்ள ராகுலின் ஒற்றுமை நியாய யாத்திரையில் ஆம் ஆத்மி கட்சியும் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் பொதுக்கூட்டத்தில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராகுல் காந்தியுடன் அர்விந்த் கேஜ்ரிவால்

மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி தனது இரண்டாம் கட்ட ஒற்றுமை நியாய யாத்திரையை கடந்த ஜன.14-ம் தேதியன்று மணிப்பூரில் தொடங்கினார். பல்வேறு மாநிலங்கள் வழியாக யாத்திரை பயணித்த நிலையில் நாளை (மார்ச்7) குஜராத் வந்தடைகிறது.14 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட ஏழு மாவட்டங்கள் வழியாக சென்று 10-ம் தேதியன்று மகாராஷ்டிராவில் யாத்திரை நுழைகிறது.

குஜராத்தில் நடைபெற உள்ள யாத்திரையில் கூட்டணி கட்சியான ஆம் ஆத்மி கட்சியினரும் பங்கேற்க வேண்டும் என்று காங்கிரஸ் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் தற்போது இணக்கமான உறவை கொண்டுள்ளன. டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இரு கட்சிகளுக்கும் இடையேயான தொகுதிப் பங்கீடும் சுமூகமாக நடந்து முடிந்துள்ளது.

எனவே, காங்கிரஸின் அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ள ஆம் ஆத்மி, டகோட் நகரில் நாளை நடைபெற உள்ள யாத்திரையில் தங்கள் கட்சித் தொண்டர்கள் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது.

ராகுல்காந்தி

இந்த யாத்திரையில் தாஹோத் மாவட்டம் ஜஹேலோட் என்ற இடத்தில் நடக்க உள்ள கூட்டத்தில் பங்கேற்க வருமாறு டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்திருந்தார். இதனை ஏற்ற கேஜ்ரிவால் ராகுல் யாத்திரையில் பங்கேற்க உள்ளதாகவும், இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

x