திருப்பூர்: லஞ்சம் மற்றும் ஊழலில் ஊறித் திளைக்கும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணைய அதிகாரிகளை தமிழ்நாடு முழுவதும் கூண்டோடு மாற்றம் செய்ய வலியுறுத்தி சென்னையில் வரும் 19-ம் தேதி போராட்டம் நடைபெற உள்ளது.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (செப். 9) வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்காக மனுக்கள் அளித்தனர்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் திருப்பூர் மேற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.பி.டி. மகாலிங்கம் தலைமையில் அளித்த மனுவில், "தமிழ்நாட்டில் ஆறுகள், கழிநீர் ஓடைகளாக மாற்றப்பட்டு, குடிநீரும் - பாசன நீரும் நஞ்சாக்கப்பட்டு, உணவு நஞ்சாக்கப் பட்டதால் புற்றுநோய் பல்கிப் பெருகி தமிழ்நாடு புற்றுநோயாளிகளின் மாநிலமாக மாறி கொண்டிருக்கிறது.
புனிதமான ஆறுகளை பாதுகாக்காமல் மணல் குவாரிகளை நடத்துவதற்கு அனுமதி வழங்குவது, நிலத்தடி நீரை சேமித்து வைக்க உதவும் நிலத்தடி பாறைகளை, மலைகளை, எம் சாண்ட், ஜல்லி, கிரஷர், கிரானைட் சுண்ணாம்பு என குவாரிகளாக மாற்றி கொள்ளையடித்து தமிழகத்துக்கு தண்ணீர் தராத கேரளா - கர்நாடகாவுக்கு விற்பதற்கு அனுமதி அளித்ததற்கும், மாவட்டந்தோறும் சிப்காட் தொழிற்பேட்டைகளை அமைத்து தொழில் வளர்ச்சி ஏற்படுத்துகிறோம் என்ற பெயரில், சுற்றுச்சூழலை கெடுத்து மண்ணை, காற்றை, நீரை நஞ்சாக்கி சுற்றுச்சூழல் சிறப்பு மண்டலங்கள் உருவாக்குவதற்கு அனுமதி கொடுப்பது என தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் கெடுவதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலை பாதுகாக்க உருவாக்கப்பட்ட தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்கம் மதிப்பீட்டு ஆணையம் லஞ்சம், ஊழலில் ஊறித் திளைக்கிறது. அனைத்து வகையான சுற்றுச்சூழல் அனுமதிகளையும் கேள்வி கேட்காமல் தொடர்ந்து கெடுத்து வருவதும், நிபந்தனைகளை மீறி இயக்கி சுற்றுச்சூழலை கெடுக்கும் போது அதன் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் அதிகாரிகளை கூண்டோடு இடமாற்றம் செய்ய வேண்டும்.
நேர்மையான அதிகாரிகளை நியமித்து, தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். இதையொட்டி வரும் 19-ம் தேதி சென்னை பனகல் மாளிகையில் போராட்டம் நடத்த உள்ளோம். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று மனுவில் கூறியுள்ளனர்.