பழைய குற்றாலம் சுற்றுலாத் தலத்தை பாதுகாக்க வனத்துறைக்கு அனுமதி: ரத்து செய்ய இந்திய கம்யூ. வலியுறுத்தல்


இரா.முத்தரசன் | கோப்புப் படம்.

சென்னை: பழைய குற்றாலம் சுற்றுலாத் தலத்தை பாதுகாக்க வனத்துறைக்கு வழங்கிய அனுமதி ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூ.கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து இக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: 'தமிழ்நாட்டின் சுற்றுலாத் தலங்களில் குற்றாலம் மிக முக்கியமான தலமாகும். இங்குள்ள அருவிகள் பொதுமக்களை பெரிதும் ஈர்த்து வருவது அனைவரும் அறிந்த செய்தியாகும். இங்குள்ள தேனருவி, செண்பக தேவி அருவி, சிற்றருவி, பழத்தோட்ட அருவி, மெயின் அருவி என பல அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளித்து, குதூகலமடைந்து வந்தனர்.

இந்த நிலையில், தேனருவி, செண்பகதேவி அருவி, சிற்றருவி, பழத் தோட்ட அருவி ஆகிய அருவிகள் அமைந்துள்ள இடங்களை, காப்புக் காடுகள் பாதுகாப்பு என்ற பெயரில் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதால், அங்கு சுற்றுலாப் பயணிகள் செல்லுவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.

தற்போது பழைய குற்றாலம் பகுதியில் வனத்துறை அமைக்கும் காப்புக் காடுகளில் நெகிழி பொருட்கள் (பிளாஸ்டிக்) சேர்ந்து, இயற்கை சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க, பழைய குற்றாலம் சாலையில் வனத்துறை சோதனைச்சாவடி அமைக்க, கடந்த 04.06.2024 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அனுமதி கோரியுள்ளது. இதன் மீது நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் 29.06.2024 ஆம் தேதி வனத்துறை சோதனைச்சாவடி அமைக்க அனுமதி அளித்துள்ளார். இது தொடர்பாக குற்றாலம், தென்காசி பொதுமக்கள் கருத்துக்களை மாவட்ட நிர்வாகம் கேட்டறியவில்லை.

சுற்றுலாப் பயணிகளின் வருகை தான் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரமாக அமைந்திருப்பதையும், அருவிகளை தொடர்ந்து தலையணை, அழுத கண்ணி ஆறுகள், செங்குளம், வைராவி கால்வாய்கள் வழியாக 28 குளங்கள் பெறுகின்ற நீராதாரத்தின் மூலம் வாழ்வாதாரம் பெற்றுள்ள விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் மாவட்ட ஆட்சியர் கருத்தில் கொள்ளவில்லை என்பதை தமிழ்நாடு அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதன் மீது நடவடிக்கை எடுத்து, தென்காசி மாவட்ட ஆட்சியர் 29.06.2024 ஆம் வனத்துறைக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்து, பழைய குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளும், அதற்கு சென்று, திரும்பும் பாதைகளும் பொதுப் பணித்துறை மற்றும் உள்ளாட்சித் துறை நிர்வாகங்கள் மூலம் பராமரிப்பதை உறுதி செய்து உத்தரவு வழங்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது.' இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.

x