சென்னை: டெல்லியில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்ட 1556 கிலோ தரமற்ற ஆட்டிறைச்சியை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வடமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு தொடர்ந்து மலிவான விலையில் தரமற்ற இறைச்சிகள் கொள்முதல் செய்து கொண்டு வரப்பட்டு, விற்பனை செய்யப்படுவது குறித்து புகார் எழுந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, இவ்வாறு வட மாநிலங்களில் இருந்து உரிய ஆவணங்கள் மற்றும் பாதுகாப்பின்றி ரயில்கள் மூலம் கொண்டுவரப்படும் தரமற்ற இறைச்சிகளை சோதனையிட்டு பறிமுதல் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த ஆக.20-ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து 1700 கிலோ தரமற்ற ஆட்டிறைச்சி பாதுகாப்பற்ற முறையில் அடைக்கப்பட்டு ரயில் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. இதனை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் வைத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் தொடர்ச்சியாக இன்று, டெல்லியில் இருந்து சென்னைக்கு வரும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தரமற்ற ஆட்டிறைச்சி கொண்டு வரப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் தலைமையிலான குழுவினர், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அதிகாலையில் இருந்தே காத்திருந்து, தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் வந்தவுடன் உள்ளே சென்று சோதனையிட்டனர். அப்போது சுமார் 1,556 கிலோ ஆட்டிறைச்சி தரமற்ற நிலையில், சுகாதாரமற்ற முறையில் அடைத்து வைத்து டெல்லியில் இருந்து கொண்டுவரப்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து அதன் மாதிரிகளை உடனடியாக பரிசோதனை செய்ய ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து தரமற்ற 1556 கிலோ இறைச்சிகளையும் பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், அவற்றை முறையாக அழிக்க மாநகராட்சி ஊழியர்களிடம் ஒப்படைத்தனர். மேலும் இந்த இறைச்சி எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? உரிமையாளர் யார்? எந்தெந்த உணவகங்களுக்கு இவை விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தன உள்ளிட்டவை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.