சொகுசு கேரவனில் நீதிமன்றம் வந்த ராக்கெட் ராஜா... தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவிப்பு!


ராக்கெட் ராஜா

கொலை வழக்கிற்காக நீதிமன்றத்தில் ஆஜராக சொகுசு கேரவனில் வந்த ராக்கெட் ராஜா, வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

2016 ஆம் ஆண்டு நெல்லை பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் காவல் நிலைய எல்லை பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கு ஒன்றில் விசாரணைக்காக ராக்கெட் ராஜா இன்று நெல்லை மாவட்ட நீதிமன்றத்திற்கு வந்திருந்தார்.

இதையொட்டி ராக்கெட் ராஜாவின் ஆதரவாளர்கள் நீதிமன்ற வளாகத்திற்குள் திரண்டனர். இந்நிலையில் சினிமா நடிகர்களுக்கு பயன்படுத்தப்படும் பென்ஸ் ரக சொகுசு கேரவனில் வந்திறங்கினார். இதை பார்த்த வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் வியப்புடன் வேடிக்கை பார்த்தனர்.

பின்னர் நீதிமன்றத்தில் ஆஜரான ராக்கெட் ராஜாவுக்கு அடுத்த மாதம் 11ஆம் தேதி நீதிபதி வாய்தா வழங்கினார். இதையடுத்து அதே கேரவனில் கெத்தாக கிளம்பி சென்றார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ராக்கெட் ராஜா, "2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் நானே போட்டியிடுவேன். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நன்றாக இருக்கிறது" என்றார்.

x