தமிழகம் முழுவதும் உள்ள ஆதிதிராவிட மாணவர் விடுதிகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்: இபிஎஸ்


சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள ஆதிதிராவிட மாணவ, மாணவியர் விடுதிகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. புதுக்கோட்டையில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சம்பவம், தென்காசி மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிக்கு குடிநீர் இணைப்பு வழங்க மறுத்த நிகழ்வு, தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் படுகொலை என்று பட்டியலின மக்களுக்கு எதிரான தாக்குதல்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில் செயல்படும் 1,331 மாணவ, மாணவியர் விடுதிகளில் 82,500 பள்ளி மாணவர்கள், 16,500 கல்லூரி மாணவர்கள் என 99 ஆயிரம் பேர் தங்கியுள்ளனர்.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விதிகளின்படி உணவுப்படி வழங்கப்படுவதாகவும், பண்டிகை காலங்களில் சிறப்பு உணவு வழங்க சிறப்பு நிதியும், சோப்பு, எண்ணெய் போன்ற தினசரி பயன்படுத்தும் பொருட்கள் வாங்க மாதம் ஒருமுறை பள்ளி மாணவர் ஒருவருக்கு ரூ.100-ம், கல்லூரி மாணவர் ஒருவருக்கு ரூ.150-ம் வழங்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.

மயிலாப்பூரில் உள்ள ஆதிதிராவிட மாணவர் விடுதியில் கழிப்பறைகள் சுகாதாரமின்றியும், கதவுகள் உடைந்தும் உள்ளன. இரவு நேரங்களில் வெளியாட்கள் வளாகத்தில் புகுந்து, மதுபானங்கள் அருந்துகின்றனர். அசைவ உணவு மிகக் குறைந்த அளவே வழங்கப்படுகிறது.

பல மாணவர்கள் சாப்பாடு இல்லாமல், பசியுடன் இருக்கக்கூடிய சூழ்நிலை உள்ளது. தண்ணீர் தொட்டி சுத்தம் செய்து பல ஆண்டுகள் ஆகிறது. இதுபோன்ற பல குறைகளை நிர்வாகத்திடம் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

எனவே, உடனடியாக சிறப்புக் குழு அமைத்து, தமிழகம் முழுவதும் உள்ள ஆதிதிராவிட மாணவ, மாணவியர் விடுதிகளை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து, உணவு, சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x