தெருமுனை கூட்டங்களை காங்கிரஸார் நடத்த வேண்டும்: செல்வப்பெருந்தகை அறிவுறுத்தல்


சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்ட அறிக்கை: மக்களை பிளவுபடுத்துகிற அரசியலுக்கு எதிராக நாட்டில் வெறுப்பை வேரறுக்கவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் இந்திய ஒற்றுமை பயணத்தை கடந்த 2022-ம் ஆண்டு செப். 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி 2023 ஜன. 30-ல் காஷ்மீரில் ராகுல் நிறைவு செய்தார்.

அன்பையும், சமூக ஒற்றுமையையும் பரப்பி மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதில் மகத்தான வெற்றி பெற்றார். பாஜகவின் வெறுப்பு அரசியலை முறியடித்த பெருமை ராகுல்காந்திக்கு உண்டு.

அடுத்த கட்டமாக வகுப்பு கலவரத்தால் கொழுந்துவிட்டு எரிந்த மணிப்பூரில் இருந்து மும்பை வரை இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தை மேற்கொண்டார். இந்த பயணத்தில் 6,000 கி.மீ. தூரத்தில் பலதரப்பட்ட மக்களை சந்தித்து உரையாடினார். மக்களின் உணர்வுகளை பகிர்ந்துகொண்டார்.

இதன்மூலம் வரும் காலங்களில் வகுப்புவாத சக்திகளின் அரசியல் முறியடிக்கப்பட்டு ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூக நீதி ஆகிய லட்சியங்களை ராகுல்காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி வெற்றிகரமாக முன்னெடுத்து செல்லும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

இந்திய ஒற்றுமை பயணத்தின் 2-வது ஆண்டு நிறைவு நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டிருக்கிறது. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தின் சிறப்புகளை எடுத்து கூறும் வகையில் ஒரு வார காலத்துக்கு மாவட்ட, வட்டார, நகர, பேரூர், கிராம அளவில் காங்கிரஸார் தெருமுனை கூட்டங்களை நடத்தி பரப்புரை மேற்கொள்ளவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

x