மத்திய அரசின் மும்மொழி கொள்கை மிகவும் அவசியம்: தமிழக சமஸ்கிருதபாரதி ஒருங்கிணைப்பாளர் கருத்து


அனந்த கல்யாண கிருஷ்ணன்

கோவை: அரசியல் லாபத்துக்காகவும், மக்களிடம் மொழி விரோதத்தை ஏற்படுத்தும் நோக்கில் சிலர் செயல்படுகின்றனர் என தமிழகம், கேரளா சமஸ்கிருத பாரதி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அனந்த கல்யாண கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ‘இந்து தமிழ் திசையிடம் கூறியதாவது: “கடந்த சில நாட்களாக ஒரு சில அரசியல் தலைவர்கள் மத்திய அரசின் மும்மொழி கல்வி திட்டம் குறித்தும் சமஸ்கிருத மொழி கற்பிப்பதை எதிர்த்தும் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். கடந்த 22 ஆண்டுகளாக சமஸ்கிருத மொழி பரப்புவதற்காக நடவடிக்கை மேற்காண்டு வருகிறேன்.

தமிழகம், கேரளா மாநிலங்களின் ஒருங்கிணைப்பாளராக பொறுப்பு வகித்து வருகிறேன். மக்கள் மத்தியில் சமஸ்கிருதம் கற்க ஆர்வம் அதிகம் காணப்படுகிறது. தன்னார்வலர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் எங்களால் கேட்கும் அனைவருக்கும் கற்பிக்க முடியவில்லை. அஞ்சல் வழியில் பலர் பயில்கின்றனர்.

கடந்த 30 ஆண்டுகளில் 10 நாட்களில் சமஸ்கிருதம் பேச கற்க உதவும் வகுப்புகளில் 2 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர். மும்மொழி கொள்கை மிகவும் அவசியம். தமிழ் முக்கியம். மாற்றுக்கருத்து இல்லை. இருப்பினும் பல மாநிலங்களில் தமிழர்கள் ஆயிரக்கணக்கானோர் வாழ்கின்றனர். அவர்களுக்கு தமிழ் எழுத படிக்க தெரியாது. இன்னொரு மொழி படிக்க அரசு அனுமதி வழங்கினால் தமிழை அவர்கள் பயில வாய்ப்பு கிடைக்கும்.

எங்களுக்கு அரசியல் கிடையாது. எங்கள் கவனம் எல்லாம் மக்களுக்கு கற்றுகொடுப்பதில் தான் உள்ளது. வகுப்புகள் இலவசமாக நடத்தி வருகிறோம். தேர்வுகளும் நடத்துகிறோம். சமஸ்கிருதம் கற்றால் பள்ளிகளில் ஆசியர் பணி கிடைக்கும். இளைஞர்கள் சமஸ்கிருதம் கற்க முன்வர வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள்” இவ்வாறு அனந்த கல்யாண கிருஷ்ணன் தெரிவித்தார்.

x