திமுக பவள விழா: காஞ்சிபுரத்தில் கட்சியினர் தங்கள் வீடுகளில் திமுக கொடியேற்ற அமைச்சர் வேண்டுகோள்


பல்லாவரம்: திமுகவின் பவள விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் உள்ள கட்சியினர் அனைவரும் தங்களில் வீடுகளில் கழக கொடியை ஏற்றி பட்டொளி வீசி பறக்கச் செய்திடுவோம் என்று காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான தா.மோ.அன்பரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “பேரறிஞர் அண்ணாவால் 1949-ம் ஆண்டு தொடங்கப்பட்ட திமுக 75-வது ஆண்டினை பவள விழாவாக கொண்டாடி மகிழ்ந்து வருகிறது. பவள விழா ஆண்டில் கழகத்தை தோற்றுவித்த பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 அன்று காலை கட்சியினர் அனைத்து கிளைகளிலும் உள்ள கழக கொடிக்கம்பங்களை புதுப்பித்து கழகத்தின் இருவண்ணக் கொடியை கம்பீரமாக ஏற்ற வேண்டும். அத்துடன் கழகத் தொண்டர்களால் தான் இந்த பேரியக்கம் 75 ஆண்டுகளை கடந்து கம்பீரமாக பீடுநடை போட்டு வருகிறது.

இதனை நாட்டு மக்களுக்கு எடுத்துக் காட்டும் வகையில், கழகத்தினர் அனைவரின் வீடுகளிலும் கட்சி கொடியை பட்டொளி வீசி பறக்கச் செய்ய வேண்டும். காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் ஒன்றிய - நகர - பகுதி - பேரூர்களில் அடங்கி உள்ள வார்டு - கிளைகளில் உள்ள அனைத்துக் கொடிக்கம்பங்களையும் வர்ணம் தீட்டி புதுப்பித்து வருகிற செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாள் அன்று காலை 9.00 மணிக்கெல்லாம் அனைத்து கிளைகளிலும் கழக முன்னோடிகளை வைத்து, கொடியை ஏற்ற வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

x