அருணாச்சலப் பிரதேசத்தில் 'ஆபரேஷன் லோட்டஸ்'... காங்கிரஸ் கூண்டோடு காலி!


பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள்

அருணாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூண்டோடு பாஜகவுக்கு மாறியுள்ள நிலையில் முன்னாள் முதல்வர் மட்டுமே அங்கு மீதமுள்ளார்.

நபம் துகி

அருணாசலப் பிரதேசத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 60 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெறும் 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த நிலையில் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து அங்கு சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ் கட்சி தீவிரமாக தயாராகி வருகிறது.

இந்த நிலையில் அங்கு காங்கிரஸ் கட்சியை ஒன்றும் இல்லாமல் செய்ய 'ஆபரேஷன் லோட்டஸ்' நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் விளைவாக அங்குள்ள நான்கு எம்எல்ஏக்களுடனும் பாஜக பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் முதல் கட்டமாக காங்கிரசின் 2 எம்எல்ஏக்கள் கடந்த வாரம் பாஜகவிற்குத் தாவினர். மீதம் இரண்டு பேர் மட்டுமே பாக்கி இருந்தனர். அவர்களில் ஒருவர் முன்னாள் முதல்வர் நபம் துகி. மற்றொருவர் கட்சியின் சட்டசபைக்குழு தலைவராக இருந்த லம்போ தாயெங்.

அருணாச்சலப் பிரதேசம்

இவர்கள் இருவரும் கட்சியின் மிக முக்கியமான நபர்கள் என்பதால் அவர்கள் பாஜகவுக்கு செல்லவில்லை. ஆனால் பாஜகவின் தொடர் முயற்சிகளுக்கு தற்போது லம்போ தாயங் ஆளாகியுள்ளார். அவர் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் நேற்று ஐக்கியமானார்.

இதனால் அங்கு சட்டமன்ற கட்சித் தலைவர் பதவியில் கூட காங்கிரஸ்காரர் யாரும் இல்லை. மொத்தமுள்ள 4 எல்ஏக்களில் 3 பேர் பாஜகவுக்குச் சென்றுள்ள நிலையில், தற்போது முன்னாள் முதல்வர் நபம் துகி மட்டுமே ஒரு ஒரு காங்கிரஸ் எம்எல்ஏவாக சட்டமன்றத்தில் இருக்கிறார். ஆனாலும், அவரின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதால் அது பற்றிய பெரிதான கவலை காங்கிரஸ் கட்சிக்கு இல்லை.

ஆனாலும், இப்படியே சென்றால் இந்தமுறை அருணாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸின் நிலை என்னவாக இருக்கும் என்பது பெரிய கேள்விக்குறிதான் என்று அரசியல் வட்டாரங்கள் கவலைத் தெரிவிக்கின்றன.

x