மாடம்பாக்கம்: சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு சங்கம் சார்பில் தாம்பரம் அருகே மாடம்பாக்கம் ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளில் உள்ள தண்ணீரின் மாதிரிகள் சென்னை ஐஐடி நிறுவனம் மற்றும் எம்ஜிஆர் பல்கலை. நிர்வாகத்தினர் சேகரித்தனர்.
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு சங்கம் சார்பில் சென்னை புறநகரில் நீர்நிலைகளை பாதுகாத்தல், சுற்றுச்சுழல் மாசு உள்ளிட்ட பல்வேறு மக்கள் சார்ந்த பிரச்னைகளை கவனத்தில் எடுத்து தீர்வு கண்டு வருகின்றனர். அந்த வகையில் மாடம்பாக்கத்தில் உள்ள பெரிய ஏரி உள்ளிட்ட நீர் நிலைகள் கழிவுநீர் கலந்து பயன்படுத்த முடியாத அளவிற்கு மாசு அடைந்துள்ளது. ஏரியை பாதுகாக்க பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அதன் ஒரு பகுதியாக மாடம்பாக்கம் ஏரி மற்றும் தேனுபுரீஸ்வரர் கோயில் குளத்தில் உள்ள தண்ணீர் நிலை குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தனர். அதன்படி இன்று சென்னை ஐ.ஐ.டி நிறுவனத்தில் இருந்து பேராசிரியர் இந்துமதி நம்பி மற்றும் டி. ஹிப்ரான், வி.ஆர்த்தி, சாய் சுகந்தி ஆகியோர் கொண்ட குழுவினர் மற்றும் எம்.ஜி.ஆர் பேராசிரியர் முனைவர் ரமா வைத்தியநாதன் ஆகியோர் நீரின் மாதிரிகளை சேகரித்தனர்.
இந்த நிகழ்வில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு சங்க தலைவர் எஸ்.மோகன், செயலாளர் இரா.சீனிவாசன் மற்றும் மாடம்பாக்கத்தை சேர்ந்த பல்வேறு நலச் சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர். இத்தண்ணீர் மாதிரி மூலம் நீர்நிலைகள் மாசடைந்து உள்ளதா? அப்படி மாசடைந்து இருந்தால் அதை எப்பரி சரி செய்ய வேண்டும் என ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.