“அது காழ்ப்புணர்ச்சி!” - ஸ்டாலினின் யுஎஸ் பயணத்தை விமர்சித்த அன்புமணிக்கு கனிமொழி பதிலடி


சிவகங்கை அருகே ஒக்கூரில் இன்று நடைபெற்ற திமுக நிர்வாகி வீட்டு இல்ல நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. | படம்: ட்விட்டர்.

சிவகங்கை: ''நடக்காத கனவுகளுடன் இருப்போரின் காழ்ப்புணர்ச்சியால் வந்த பேச்சு'' என முதல்வரின் வெளிநாட்டு பயணத்தால் முதலீடுகள் ஈர்க்கவில்லை என்று அன்புமணி கூறிய கருத்துக்கு கனிமொழி எம்.பி பதிலடி கொடுத்தார்.

சிவகங்கை அருகே ஒக்கூரில் இன்று நடைபெற்ற திமுக நிர்வாகி வீட்டு இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்று கனிமொழி பேசியதாவது: ''தமிழகத்தில் இளைஞர்கள், பெண்கள் படிக்க வேண்டும் என்பதற்காக பல திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். ஒரு காலக்கட்டத்தில் பெண்களை படிக்க விட மாட்டர். ஆண்களிலும் சில சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் படித்து வந்தனர். நமக்கு கல்வி மறுக்கப்பட்டது. ஆனால் தற்போது அனைவரது வீடுகளிலும் படித்து வருகின்றனர்.

அனைவருக்கும் சமூகத்தில் மரியாதை, உரிமையை பெற்றுத் தந்தது திராவிட இயக்கம். அனைவருக்கும் கல்வி கிடைக்கச் செய்த தியாகங்கள், விவசாயத்தைக் காப்பாற்ற இலவச மின்சாரம் தந்தவர் கருணாநிதி என அடுத்த தலைமுறைக்கு சொல்லித் தர மறந்துவிடுகிறோம். ஏனென்றால் தமிழர்களுக்கு மறதி அதிகம். அனைத்தையும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும்.'' இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, 'முதல்வர் வெளிநாடு பயணத்தால் முதலீடுகள் ஈர்க்கவில்லை' என்று அன்புமணி விமர்சனம் செய்தது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு கனிமொழி பதிலளிக்கையில், ''நடக்காத கனவுகளுடன் இருப்போரின் காழ்ப்புணர்ச்சியில் வந்த பேச்சுதான் அது. முதல்வரின் வெளிநாட்டு பயணம் மூலம் பல முதலீடுகள் ஈர்க்கப்பட்டு வந்துள்ளது தான் உண்மை. மு.க.ஸ்டாலின் பதவியேற்றதில் இருந்து தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்னணி மாநிலமாக திகழ்கிறது'' என்றார்.

x