முதல் பரிசு ரூ.5,000 - தென்காசி மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டிகள் அறிவிப்பு


பிரதிநிதித்துவப் படம்.

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் தென்காசி மாவட்டத்தில் 221 ஊராட்சிகளிலும் செயல்பட்டு வருகிறது. கிராமப்புறங்களில் வாழும் குழந்தைகள், வளரிளம் பருவத்தினர், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் முதியோர்கள் போதிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு இல்லாமல் பலவித நோய்களுக்கு ஆளாகின்றனர். குறிப்பாக ரத்த சோகையினால் பாதிக்கப்படுகின்றனர்.

இவர்களின் நலனை மேம்படுத்தும் நோக்கத்தில் கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவின் மூலம் உணவு, ஊட்டச்சத்து, உடல் நலம், தன் சுத்தம் மற்றும் சுகாதாரம் பேணுதல் திட்டத்தின் மூலம் ரத்த சோகை இல்லாத கிராமம் குறித்த சிறப்பு பிரச்சாரம், சிறுதானியங்கள் மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்படுகிறது.

சிறுதானியம் மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா நடத்துவதன் மூலம் கிராமப்புறங்களில் உள்ள அடித்தட்ட மற்றும் விளிம்பு நிலை மக்களுக்கு தேவையான ஆரோக்கியத்தை பேணும் வகையில் உள்ளூரில் கிடைக்கும் சிறுதானியங்கள், கீரை வகைகள், காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டே சரிவிகித உணவை பெறுவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

இதன் அடிப்டையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வட்டாரம், கிராம ஊராட்சி மற்றும் மாவட்ட அளவில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற உள்ளது. தென்காசி மாவட்டத்தில் ஊராட்சி அளவில் அனைத்து ஊராட்சிகளிலும் இன்று (9-ம் தேதி) முதல் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.300, இரண்டாம் பரிசாக ரூ.200, மூன்றாம் பரிசாக ரூ.100 வழங்கப்பட உள்ளது. வட்டார அளவில் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் 16.9.2024 முதல் 20.9.2024 வரை நடைபெற உள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.2500, இரண்டாம் பரிசாக ரூ.2,000, மூன்றாம் பரிசாக ரூ.1500 மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

மாவட்ட அளவில் 25.9.2024 அன்று நடைபெறவுள்ள போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5,000, இரண்டாம் பரிசாக ரூ.4,000, மூன்றாம் பரிசாக ரூ.3000 வழங்கப்படும். மேலும், 2 பேருக்கு ரூ.2500 வீதம் சிறப்பு பரிசாக ரூ.5000, 3 பேருக்கு ஆறுதல் பரிசாக ரூ.2000 வீதம் ரூ.6000, வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

கிராம ஊராட்சிகளில் வெற்றி பெற்ற மகளிர் சுய உதவிக் குழுக்கள் வட்டார அளவில் நடைபெறும் ஊட்டச்சத்து போட்டிகளில் பங்கேற்க தகுதியுடையோர் ஆவர். வட்டார அளவில் வெற்றி பெற்ற மகளிர் சுய உதவிக்குழுக்கள் மாவட்ட அளவில் நடைபெறும் ஊட்டச்சத்து போட்டிகளில் பங்கேற்க தகுதியுடையோர் ஆவர்.

இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மாவட்ட இயக்க மேலாண்மை அலகு அலுவலகத்திலும், தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் வட்டார இயக்க மேலாண்மை அலகிலும் தொடர்புகொள்ளலாம் என தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.

x