ஆஸ்திரேலியா பிரதமர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு; திரிணமூல் காங்கிரஸ் பெண் எம்பி கிண்டல்


திரிணமூல் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மஹுவா மொய்த்ரா

உலகக் கோப்பையை ஆஸ்திரேலிய அணி வென்றுள்ள நிலையில், அந்நாட்டு பிரதமர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு என்று திரிணமூல் காங்கிரஸ் பெண் எம்பி கிண்டல் செய்துள்ளார்.

மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வதுபவர்களில் திரிணமூல் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மஹுவா மொய்த்ராவும் ஒருவர். எதிர்க்கட்சித் தலைவர்களின் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவதையும் கடுமையாக எதிர்த்து வருகிறார்.

அண்மையில், பிரதமர் நரேந்திர மோடி, தொழிலதிபர் கவுதம் அதானிக்கு எதிராக மக்களவையில் கேள்வி எழுப்ப திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா லஞ்சம்பெற்றதாக புகார் எழுந்தது. குறிப்பாக தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் இருந்து பல்வேறு பரிசுப் பொருட்களை மஹுவா பெற்றதாக கூறப்பட்டது. இது தொடர்பாக பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே அளித்த புகாரின் பேரில், விசாரணை நடத்த மக்களவை நெறிமுறை குழுவுக்கு மக்களவை தலைவர் ஓம் பிர்லா உத்தரவிட்டார். நெறிமுறை குழு முன்பு மஹுவா மொய்த்ரா நவம்பர் 2-ம் தேதி ஆஜராகி விளக்கம் அளித்தார். இதையடுத்து, மஹுவா மொய்த்ராவை மக்களவையில் இருந்து பதவி நீக்கம் செய்யுமாறு மக்களவை தலைவருக்கு நெறிமுறை குழு பரிந்துரை செய்துள்ளது.

இந்தநிலையில், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் இந்திய அணியை 43 ஓவர்களில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வீழ்த்தியது. ஏற்கெனவே 5 முறை உலக்கோப்பையை வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, தற்போது 6-வது முறையாக உலகக்கோப்பையை வென்றுள்ளது. இந்த உலகக்கோப்பையை இந்திய பிரதமர் மோடியும், ஆஸ்திரேலியா பிரதமரும் இணைந்து ஆஸ்திரேலியா அணிக்கு கொடுத்தனர்.

இதனிடையே, திரிணமூல் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மஹுவா மொய்த்ரா பாஜகவை கிண்டல் செய்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில், ஆஸ்திரேலியா பிரதமர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு என்று கிண்டல் செய்துள்ள அவர், உலகக் கோப்பை இறுதிப்போட்டி நடந்த மைதானத்தின் பெயரையும் மாற்றி கிண்டல் செய்துள்ளார். மேலும், ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடந்த உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது என்று மஹுவா கூறியுள்ளார்.

x