எம்.பி. தகுதி நீக்க உத்தரவை மக்களவை செயலகம் திரும்பப் பெற்றதையடுத்து, மக்களவைக் கூட்டத்தில் ராகுல் காந்தி இன்று பங்கேற்றார். தகுதியிழப்பு நடவடிக்கையால் கடந்த சில மாதங்களாக மக்களவைக்கு வர இயலாத சூழலில் இருந்த ராகுல் காந்தி, மீண்டும் அவைக்கு திரும்பியதால் எதிர்க்கட்சிகள் உற்சாகமடைந்துள்ளன.
மோடி குடும்பப் பெயர் தொடர்பான ராகுலுக்கு எதிரான அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை பெற்றவர்கள் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி எம்.பி,, எம்எல்ஏ பதவியில் நீடிக்க முடியாது. அதன்படி, கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்.பி.யான ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார். அவரது மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் ராகுலுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை கடந்த வெள்ளிக்கிழமை நிறுத்தி வைத்தது.
இதனால், ஏற்கெனவே அவரது எம்.பி. பதவி தகுதியிழப்பை மக்களவை செயலகம் இன்று காலை திரும்பப் பெற்று, வயநாடு தொகுதி எம்.பி.யாக ராகுல் காந்தி தொடர்வார் என்று அறிவித்தது. இதையடுத்து, ராகுல் காந்தி இன்று மக்களவைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். நீண்ட நாட்களுக்குப் பின்னர் ராகுல் காந்தி அவைக்குத் திரும்பியதால் காங்கிரஸ் கட்சியினர் மகிழ்ச்சியடைந்தனர். ‘இந்தியா கூட்டணியைச்’ சேர்ந்த எதிர்க்கட்சிகளும் ராகுல் காந்தியின் வருகையால் உற்சாகமடைந்ததுடன் அவருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் விளக்கம் அளிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் இன்றும் முடங்கியது. இதனிடையே, அரசு மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது நாடாளுமன்றத்தில் நாளை விவாதம் தொடங்குகிறது. விவாதத்துக்குப் பின் 10-ம் தேதி பிரதமர் மோடி பதிலளிக்கிறார். இந்த விவாதத்திலும் முக்கிய குரலாக ராகுல் காந்தி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.