“எங்களுக்கு மாட்டிறைச்சி வேண்டும்” - அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் பதிலடி!


சென்னை: தமிழக பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட வரும் காங்கிரஸாருக்கு உணவு ஏற்பாடு செய்து தரப்படும் என்று அண்ணாமலை கூறியதற்கு தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பதிலளித்துள்ளார்.

பிரதமர் மோடியும், அமித்ஷாவும் தமிழர்களை இழிவாக பேசியுள்ளதாகவும், ஒரு வாரக் காலத்துக்குள் இருவரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லையென்றால் பாஜக அலுவலகம் முன்பு காங்கிரஸ் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடும் என செல்வப்பெருந்தகை அண்மையில் தெரிவித்திருந்தார்.

செல்வப்பெருந்தகையின் இந்த அறிவிப்புக்கு தனது எக்ஸ் பக்கத்தில் பதிலளித்த அண்ணாமலை, “தமிழக பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக, காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அறிவித்துள்ளதாக அறிந்தேன். எங்கள் அலுவலகம் வரவிருக்கும் தேதியை முன்பே அறிவித்தால், வரும் பத்து பேருக்கும், உணவு ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும்” என்று கிண்டலாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் பா.ராமச்சந்திரனின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் பா.ராமச்சந்திரனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் அண்ணாமலையின் பதிவு குறித்த கேள்வியை செய்தியாளர்கள் முன்வைத்தனர். இதற்கு பதிலளித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், “எங்களுக்கு அசைவம் வேண்டும். எங்களுக்கு மாட்டிறைச்சி பிடிக்கும். வரும்போது சொல்கிறோம். இதையெல்லாம் சமைத்து வைத்துவிடுங்கள். இரண்டு நாட்கள் டைம் வேண்டுமானாலும் கொடுக்கிறோம்” என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “எந்தவொரு நல்லாட்சியும் காமராஜர் ஆட்சிதான். காமராஜர் மிகப்பெரிய நல்ல ஆட்சியை தந்தார். பல அணைகளை கட்டினார், தொழிற்சாலைகள் திறந்தார், மதிய உணவு திட்டம் கொண்டுவந்தார், குழந்தைகளை படிக்க வைத்தார். அதனால் காமராஜர் ஆட்சியை நல்லாட்சி என்கிறோம்.

அதேபோல ஸ்டாலினும் தன்னுடைய ஆட்சியில் பெண்களுக்கு பல நல்ல காரியங்களை செய்திருக்கிறார். அவர்களுக்கு மாதம் ரூ.1000 தரப்படுகிறது. இலவச பேருந்து பயணம் தரப்படுகிறது. மாணவர்களுக்கு இலவச காலை உணவு வழங்கப்படுகிறது. இவ்வளவு நல்ல காரியங்களை செய்யும் ஆட்சி நல்ல ஆட்சி. அது ஸ்டாலின் ஆட்சியாக இருந்தாலும் சரி, காமராஜர் ஆட்சியாக இருந்தாலும் சரி” இவ்வாறு ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.

x