மேய்ச்சலுக்கு சென்று வீடு திரும்பிய 5 கறவை மாடுகள் அடுத்தடுத்து உயிரிழப்பு @ புதுச்சேரி


புதுச்சேரி: புதுச்சேரியில் மேச்சலுக்கு சென்று வீடு திரும்பிய 5 கறவை மாடுகள் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில், தனியார் தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய கழீவுநீரை குடித்ததால் இந்த விபரீதம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

புதுச்சேரி அடுத்த திருவண்டார்கோயில் வாட்டர் டேங்க் தெருவை சேர்ந்தவர் மாயகிருஷ்ணன் - இந்திராணி தம்பதியினர். இவர்கள் சுமார் 15 கறவை மாடுகளை வைத்து வளர்த்து, அதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாயகிருஷ்ணன் தனது ஊரின் அருகே உள்ள பொக்லைன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையின் பின்புறம் மாடுகளை மேய்த்து உள்ளார். அப்பொழுது சில மாடுகள் தொழிற்சாலையின் பின்புறமாக தேங்கி நிற்கும் கழிவு நீரை குடித்ததாக கூறப்படுகிறது. மாலையில் மாடுகளை மாயகிருஷ்ணன் வீட்டுக்கு அழைத்து வந்தார். அப்போது திடீரென இரவு இரண்டு மாடுகள் வாயில் நுரையுடன் மயங்கி விழுந்து உயிரிழந்தன. தொடர்ந்து இன்று அதே போன்று மேலும் இரண்டு மாடுகளும் உயிரிழந்தன. இதனால் மாயகிருஷ்ணன் அதிர்ச்சியடைந்தார்.

கடந்த நான்கு மாதத்துக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த பூபாலன் என்பவரின் நான்கு மாடுகளும் உயிரிழந்ததாக தெரிகிறது. தொடர்ந்து இப்பகுதியில் அடிக்கடி மாடுகள் உயிரிழந்து வருவது கால்நடை வளர்ப்போர் மத்தியில் பெரும் பீதி ஏற்படுத்தியுள்ளது.

இது பற்றி அப்பகுதி மக்கள் கூறும்போது, எங்கள் பகுதியில் அடிக்கடி மாடுகள் உயிழந்து வருகின்றன. தனியார் தொழிற்சாலை கழிவுநீரை குடிப்பதால் இதுபோல் மாடுகள் உயிரிழப்பு தொடர்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் நேரடியாக அப்பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு கால்நடைகளின் உயிரிழப்புக்கான காணத்தை கண்டறிந்து தடுக்க வேண்டும். உயிரிழந்த கால்நடைகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும். என்றனர்.

இதனிடையே கறவை மாடுகள் இறந்தது குறித்து தகவல் அறிந்த தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ கோபிகா திருவண்டார்கோயில் பகுதிக்கு நேரில் சென்று மருத்துவர்களை வரவழைத்து மாடுகள் இறப்புக்கான காரணங்கள் குறித்து விசாரிக்க அறிவுறுத்தினார். அதன்பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

x