திருச்சி: காரைக்காலுக்கு பயணிகள் டெமோ ரயிலில் பின்பக்கம் இணைக்கப்பட்டுள்ள இன்ஜின் பெட்டியில் திடீரென தீப்புகை ஏற்பட்டதால் திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டதுடன் பயணிகள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
திருச்சியில் இருந்து காரைக்காலுக்கு இன்று காலை 8.25 மணிக்கு இருபக்கம் இன்ஜினுடன் சேர்த்து மொத்தம் எட்டு பெட்டிகளுடன் புறப்பட்டது. ரயில் திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் இரண்டாவது நடைமேடைக்கு வந்தபோது, பின்பக்க பொருத்தப்பட்டிருந்த ரயில் இன்ஜினின் காட் பெட் பெட்டியில் திடீரென அதிகளவில் புகை வந்தது. உடனடியாக திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டதுடன் உடனடியாக ரயில் பெட்டியில் இருந்து பயணிகளை வெளியேறும்படி ரயில்வே ஊழியர்கள் அறிவுறுத்தினர்.
பின்னர் அவர்களை வேளாங்கண்ணிக்கு செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்றி அனுப்பியதோடு இச்சம்பவம் குறித்து உடனடியாக ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். மேலும் திருவெறும்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கார்த்திகேயன் தலைமையிலான தீயணைப்பு துறையினர் ரயில் இன்ஜினில் ஏற்பட்ட தீயை உடனடியாக அணைத்தனர்
இந்நிலையில் பொன்மலை ரயில்வே பணிமனையில் இருந்து ரயில்வே தொழில் நுட்ப வல்லுனர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரயில் இன்ஜினில் தீ விபத்து ஏற்பட்டு புகை வந்ததற்குரிய காரணம் என்ன என்று ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.