குன்றத்தூர்: குன்றத்தூர் அருகே போலீஸார் நடத்திய வாகன சோதனையில் ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 145 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
குன்றத்தூர் அடுத்த சிறுகளத்தூர், சரஸ்வதி நகர் பிரதான சாலையில் நேற்று இரவு குன்றத்தூர் போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை போலீஸார் மறித்து விசாரித்த போது, முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீஸார், சோதனை செய்து பார்த்த போது, அதில், உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவரப்பட்ட 145 ஆண்ட்ராய்டு செல்போன்கள் இருந்தது தெரியவந்தது. அதன் அடிப்படையில், மூன்று பேரையும் போலீஸார் பிடித்து விசாரணை நடத்தியதில், அந்த செல்போன்கள் அனைத்தும் ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது. அவை திருட்டு செல்போன்களா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றன.
இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், தில்லை நகர் பகுதியை சேர்ந்த இராஜேஷ்(31), ஆந்திரா மாநிலம், கர்னூல் மாவட்டம், ஷெரிப் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜா(எ)மஞ்சுநாத்(30) மற்றும் வினய்குமார் (20) ஆகிய மூன்று பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையின் முடிவிலேயே அவை திருட்டு செல்போன்களா? எதற்காக தமிழ்நாட்டிற்கு கடத்திக் கொண்டு வரப்பட்டது? வேறு ஏதேனும் சமூக விரோதச் செயல்களில் ஈடுபட கொண்டு வந்தனரா? என்பது குறித்து தெரியவரும் என்று போலீஸார் தெரிவித்தனர். ஒரே நேரத்தில் 145 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.