மக்களின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறார் கலைஞர்...!


கலைஞர் கருணாநிதி

கலைஞர் கருணாநிதி நினைவு தினம் இன்று. அவரை இந்த தமிழ்நாடு நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று தற்போதுள்ள திமுக அரசாங்கமும், அதனுடைய முதல்வராக இருக்கிற கலைஞரின் மகன் ஸ்டாலினும் நிறையவே பாடுபடுகிறார்கள். அதாவது கலைஞர் நூற்றாண்டு அரங்கம், கலைஞர் மருத்துவமனை, கலைஞர் நூலகம், கலைஞர் பேனா நினைவு மண்டபம் என்றெல்லாம் ஏகத்துக்கும் அவரது பெயரை சூட்டிவிட்டால் அவரது பெயர் நினைவில் இருக்கும், மக்கள் மத்தியில் நிலை நிறுத்திவிடலாம் என்று இந்த அரசாங்கம் விரும்புவதாக தெரிகிறது.

ஜெயலலிதாவுடன் கருணாநிதி

ஆனால் அவற்றால் அல்ல, கருணாநிதி தமிழகத்துக்குச் செய்திருக்கும் சாதனைகளால் அவர் பெயரும், நினைவும் தமிழ் மக்கள் மத்தியில் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

சுதந்திர இந்தியாவில் தமிழகத்தின் வளர்ச்சிக்கான அடித்தளத்தை கர்மவீரர் காமராஜர் வலுவாக அமைத்துத் தந்தார். அதன்மேல் இன்றைய நவீன தமிழகத்தை கட்டமைத்து தந்த சிற்பி கருணாநிதி தான். அவரது தொலைநோக்கான பார்வைதான் இந்தியாவில் தமிழ்நாட்டை தனித்துவம் மிக்க மாநிலமாக உருவாக்கியிருக்கிறது என்பதை அவரைப் பிடிக்காதவர்களும் கூட ஒப்புக்கொள்வார்கள்.

கலைகளில் சிறந்தவர்கள், அறிந்தவர்கள் அனைவருக்கும் கலைஞர் என்ற பெயர் பொதுவானதாக இருந்தாலும், இன்று மட்டுமல்ல என்றுமே அது கருணாநிதிக்கு மட்டுமே சொந்தமாக நிலைத்திருக்கிறது. அந்தளவுக்கு கலை, மொழி, ஆளுமை என அனைத்திலும் சிறந்து விளங்கியவர்.

ஒருமுறை மேடையில் அவருக்கு ஆளுயர மாலை அணிவிக்கிறார்கள். அதை ஏற்றுக்கொண்ட கலைஞர் “ஆளுயர மாலை அணிவித்திருக்கிறீர்கள் என்று சொல்லிவிட்டு, அடுத்தமுறை ஆள் என்று சொல்லி நிறுத்தி, சிறிது இடைவெளிக்குப் பிறகு உயர மாலை அணிவித்திருக்கிறீர்கள் என்று அவர் சொன்னதும் எழுந்த கைதட்டல் அடங்க வெகு நேரமானது. அது போல தனித்த தனது மூளையை அவர் தமிழகம் உயர்வதற்கான பாதையில் கவனமாக செலுத்தினார்.

டெல்லியில் உற்சாக நடைபோடும் கருணாநிதி

கலைஞர் கருணாநிதி

தமிழ் என்று எடுத்துக் கொண்டாலும் செம்மொழி அந்தஸ்து, இலக்கியப் பங்களிப்பு உட்பட அதற்கு கருணாநிதி செய்திருக்கிற சேவைகளால் அவர் தலைமகனாக நினைவில் நிற்கிறார். சமுதாயத்திற்கு தேவையான திட்டங்கள் என்றால் கைரிக்‌ஷா ஒழிப்பு முதல் சமத்துவபுரம் வரை அத்தனையும் இந்தியாவுக்கே முன்னோடியான திட்டங்கள் என்று மக்களின் இதய சிம்மாசனத்தில் அவர் நிலைத்திருக்கிறார்.

இந்தியாவிலேயே முதல் முறையாக ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள், வீடுகள் தோறும் வண்ணத் தொலைக்காட்சி என்ற அவரது தொலைநோக்கு திட்டங்கள் தான் இன்றளவும் இந்தியாவின் பிற மாநிலங்களில் தேர்தல் வாக்குறுதிகளாக அறிவிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. தமிழகம் தாண்டி அங்கெல்லாமும்கூட இவ்வகை திட்டங்களால் கருணாநிதி நிலைத்து நிற்கிறார். பத்திரிகையாளர்கள் தவிக்கக்கூடாது என்று தலைநகர் சென்னை உட்பட பத்திரிகையாளர்களுக்கு குடியிருப்புகளை ஏற்படுத்தி தந்தவர், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், வட்டியில்லாக் கடன் என்ற அவரது திட்டம் தான் இன்னமும் விவசாயிகளை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு, 12 ம் வகுப்புவரை இலவசக்கல்வி, மதிய உணவில் முட்டை, முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு கல்விக்கட்டணத்தில் சலுகை, பத்தாம் வகுப்பு வரை படித்திருந்தால் பெண்களுக்கு திருமணத்திற்கு உதவித்தொகை, இலவசப்பேருந்து பயணம் என்ற அவரது திட்டங்கள் தான் பல்லாயிரக்கணக்கான மாணவர்களை பள்ளியை நோக்கி வரவழைத்து தமிழகத்தின் கல்வியறிவை உயர்த்தியது.

அதுமட்டுமில்லாமல் விவசாயக்கல்லூரி, கால்நடைக்கல்லூரி என்று உயர்படிப்புக்கான அத்தனை ஏற்பாடுகளையும் செய்திருக்கிறார்.

திராவிய இயக்கத்தின் தலைவர்களுடன் நடுநாயகமாக கருணாநிதி

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித்தொகை திட்டம், கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதி உதவி, பெண்கள் சுய உதவிக்குழுக்கள் அமைத்தது, பெண்களுக்கு சொத்தில் சமபங்கு சட்டத்தைக் கொண்டு வந்தது என்று பெண்கள் முன்னேற்றம் மற்றும் நலனுக்கான திட்டங்களையும் கொண்டு வந்தவர் அவர் தான்.

கான்கிரீட் சாலைகள், சமத்துவபுரங்கள், உழவர் சந்தைகள், வருமுன் காப்போம், மருத்துவக்காப்பீடு என்று சமுதாயம் உயர தன் சிந்தனைகளை அர்ப்பணித்தவர். அது அத்தனையிலும் கருணாநிதி நிலைத்திருக்கிறார்.

தனது சாணக்கியத்தனத்தைப் பயன்படுத்தி பலமுறை மத்தியில் ஆட்சியை அமர்த்திய கருணாநிதியின் திறமை வட இந்தியத் தலைவர்களால் என்றும் போற்றப்படுகிற ஒன்று. தீவிர அரசியல், தீவிர இலக்கியம், என்றிருந்தாலும் அவரது இயல்பான சமயோசிதமும் நகைச்சுவையும் அவரை விட்டு ஒருகணமும் அகலவேயில்லை. அவை கலைஞரின் ரத்தத்தில் ஊறிப் போனவை. தன்னையும் தன்னைச் சுற்றி இருப்பவர்களையும், சமூகத்தையும் உற்சாகமாக வைத்துக் கொள்ளும் திறமையைக் கொண்ட ஒரே அரசியல் தலைவர் அவர்தான்.

பொதுக்கூட்ட மேடை, சட்டமன்றம், பத்திரிகையாளர் சந்திப்பு, தனிப்பட்ட உரையாடல் என அனைத்திலும் அவரது பேச்சில் நகைச்சுவை நயம் நாட்டியமாடும். எக்குததப்பாய் கேள்வி கேட்டு மடக்க நினைப்பவர்களையும் எளிதாய் மடக்கி திகைக்க வைக்கும் வகையில் அவரின் வார்த்தைகளில் நகைச்சுவை இழையோடும்.

செவ்வாயில் தண்ணீர் இருப்பதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்களே?என்று அவரிடம் கேட்கப்பட்டதற்கு ‘செவ்வாயில் இருந்தால் அது உமிழ்நீர், தண்ணீர் அல்ல என்று அவர் சொன்ன பதிலில் அறிவியலும் இருந்தது, உளவியலும் இருந்தது.

இளம் மாணவர்கள் அரசியலில் ஈடுபடலாமா? என்ற கேட்கப்பட்டதற்கு அவர் சொன்ன பதில் என்றைக்கும் மாணவர்களுக்கு பாடமாக இருக்கும். ‘இளம் வயதில் அரசியல் என்பது அத்தைப்பெண் போல. பேசலாம், பழகலாம், சுற்றிச் சுற்றி வரலாம். ஆனால், தொட்டு மட்டும் விடக்கூடாது என்றார்.

கம்பராமாயணத்தை அடிப்படையாக வைத்து கவிஞர் வாலி எழுதிய 'அவதாரப் புருஷன்' நூலை விரும்பிப் படித்தார் கருணாநிதி என்று கேள்விப்பட்ட கவிஞர் வாலி, ''உங்களுக்கு ராமாயணம் பிடிக்குமா?'' என்று வியப்பாகக் கேட்டார். அதற்கு “எனக்கு ராமாயணத்து வாலியையும் பிடிக்கும். வாலியின் ராமாயணத்தையும் பிடிக்கும்'' என்று சொன்னதைக் கேட்டு அசந்து போனார் வாலி.

கலைஞர் உடல் நலக்கோளாறால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, கலைஞரிடம் மருத்துவர் “மூச்சை நல்லா இழுத்துப் புடிங்க” என்று முதலில் சொல்லிவிட்டு அடுத்ததாக “இப்போ மூச்சை விடுங்க” என்றார். அதற்கு “மூச்சை விடக் கூடதுன்னு தான் டாக்டர் நான் மருத்துவமனைக்கே வந்திருக்கேன்” என்ற கருணாநிதியின் பதிலைக் கேட்டு மருத்துவர் மூச்சுவிட சிறிதுநேரம் மறந்தே போனார். அப்படி வைராக்கியமாக இருந்த அவர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 2018 ஆகஸ்ட் ஏழாம் தேதியன்று தனது மூச்சை நிறுத்தினார்.

13 முறை சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட கருணாநிதி ஒருமுறைகூட தோல்வியைச் சந்தித்ததில்லை. ஆனால் எத்தனையோ முறை எமனை வென்ற கருணாநிதி இறுதியாக இயற்கையில் கலந்தார். அவரது அரும்பணிகளால், திட்டங்களால் அத்தனை தரப்பு மக்களின் இதய சிம்மாசனத்தில் என்றுமே வீற்றிருப்பார்.

Source : https://kamadenu.hindutamil.in

x