ஏசி ஜிம்மில் ஆக்ரோஷ பாக்ஸிங் பயிற்சியை முடித்துவிட்டு ஆசுவாசமாக அலைபேசியில் மூழ்கியிருந்தார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். அந்தக் கால டூயட் பாடல்களைக் கேட்டு ரசித்துக்கொண்டிருந்தவர், அண்ணாமலையின் பாத யாத்திரை வீடியோக்களைப் பார்த்ததும் அத்தனைக் குளிரிலும் கொத்தாக வியர்த்தார். குறிப்பாக, அண்ணாமலையுடன் அமித் ஷா ஆவேசமாக அமைதி ஊர்வலம் வரும் காட்சியைப் பார்த்ததும் கைக்குட்டையை எடுத்து நெற்றி வியர்வையை ஒற்றி எடுத்துக்கொண்டார். பின்னர், ‘பட்டத்தைப் பறிக்க நூறு பேரு’ எனும் ‘ஜெயிலர்’ பாடல் வந்ததும் ஜெயக்குமார் ரொம்பவே ஜெர்க்காகி ஆதரவாளர்களை ஆதங்கத்துடன் பார்த்தார்.
அதற்காகவே காத்திருந்த அணுக்கத் தொண்டர்கள், “புரியுதுண்ணே... நம்ம தலைவர்கள் பெயரைச் சொல்லி நம்மளையே மிஞ்சப் பார்க்கிறாங்க. நம்ம கட்சிக்கு ஒண்ணுன்னா நாலு வார்த்தை சேர்ந்தாப்புல பேசுறதுக்கு உங்களைவிட்டா நாதி இல்லை. கூட்டுங்கண்ணே பிரஸ் மீட்டை” என்று பிரஷர் கொடுத்தனர். அடுத்த அரை மணி நேரத்தில் செய்தியாளர் சந்திப்பு தொடங்கியது.
“எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சிக்காலத் திட்டங்களைத் திரும்பவும் கொண்டுவரத்தான் அண்ணாமலை நடைப்பயணம் போறதா அமித் ஷா சொல்லியிருக்கார். அப்படின்னா அதிமுகவை வழிநடத்துறது அண்ணாமலைதான்னு புரிஞ்சிக்கலாம்ங்களா?” என்று ஒரு செய்தியாளர் தொடங்கிவைத்தார்.
எந்தக் கேள்வி கேட்டாலும் எதையாவது பதிலாகச் சொல்வதில் பாண்டித்யம் பெற்றுவிட்ட ஜெயக்குமார், “இதுமாதிரி நியூஸையெல்லாம் பேப்பர்ல பார்த்துத்தான் தெரிஞ்சுக்கறேன். இதுல இருந்தே தெரியலையா... நாங்கள்லாம் எப்பவும் அண்ணன் எடப்பாடியார் வழி நடக்கிறவங்கன்னு? அதனால… அமித் ஷா சொல்றதை அரைவாசி ஆதரிக்கிறேன். மத்தபடி புரட்சித் தலைவர் - தலைவியோட பொற்கால ஆட்சியை - இடைஞ்சல் ஏதும் இல்லாம இருந்தா - எங்களால மட்டும்தான் தர முடியும். இதுக்கு மேல அமல் ஷாவுக்கு… சாரி அமித் ஷாவுக்கு விரிவா என்ன பதில் சொல்லிட முடியும்?” என்று சமாளிப்பாகச் சிரித்தார்.
“மாநில அரசைக் கலைக்க 356-ஐப் பயன்படுத்தணும்னு சொல்லிருக்கீங்க. மணிப்பூர் பத்தி ‘மன் கி பாத்’ல கூட பேசப்படாத நேரத்துல… அந்த மாநில அரசைக் கலைக்கணும்னு நீங்க பகிரங்கமா பேசுறது ஆச்சரியமா இருக்கே?” என்று இன்னொருவர் கேட்க, அவசரமாகக் குறுக்கிட்ட ஜெயக்குமார், “தம்பி… தம்பி! நான் சொன்னது விடியா திமுக கவர்ன்மென்ட்டை! மனசுல எதையோ வச்சிக்கிட்டு மணிப்பூர், மயிலாப்பூர்னு என்னத்தையாச்சும் சொல்லி மாட்டி விட்டுடாதீங்க” என்று மீண்டும் சிரித்தார்.
“கோடநாடு கேஸைக் கையில எடுத்துக்கிட்டு ஓபிஎஸ்ஸும் தினகரனும் குடைச்சல் குடுக்குறாங்களே?” என்று இன்னொரு நிருபர் கேட்டதும் கோபமான ஜெயக்குமார், “அதெல்லாம் பார்க்க ஹியூமரஸாவும் அதேசமயத்துல... நகைச்சுவையாவும்(!) இருக்கு. ரெண்டு பேரும் சேர்ந்து நாடகம் போடுறாங்க. எனக்கு நாடகம்லாம் அவ்வளவா பிடிக்காது. ஆர்க்கெஸ்ட்ரான்னா ஓகே” என்று அகலமாகச் சிரித்தார்.
“பாட்டுல உங்களுக்கு இருக்கிற ஆர்வம்தான் ஸ்பாட்ல உள்ள எல்லாருக்கும் தெரியுமே… ‘அண்ணன் டிஜே’ன்னு ராயபுரம் ரசிகர்கள்லாம் அன்பா கூப்பிடறாங்கன்னா சும்மாவா?” என்று ஒரு செய்தியாளர் சிரிக்காமல் சொன்ன கருத்தை, சிரிப்புடன் ஏற்றுக்கொண்டார் ஜெயக்குமார்.
அப்போது வேகமாக வந்த தொண்டர் ஒருவர், “அண்ணே... அண்ணே… புரட்சித் தலைவர் சிலைக்கு சிவப்பு பெயின்ட் ஊத்துனப்போ நீங்க போய் துடைச்சு விட்டீங்கள்ல… அதே மாதிரி அவரோட இன்னொரு சிலைக்குச் சிவப்புத் துணியைச் சுத்திவிட்டிருக்காங்கண்ணே” என்று அரற்ற… ஆவேசமான ஜெயக்குமார், அடுத்த பத்தாவது நிமிடத்தில் அந்த இடத்தில் ஆஜர் ஆனார்.
சிவப்புத் துணியைக் கிழித்தெறியும் ஆர்வத்துடன் சிலையின் அருகில் சென்ற ஜெயக்குமார், அதிர்ச்சியில் அவரே சிலையாகி நின்றார்.
அது சிவப்புத் துணி அல்ல, காவித் துணி!