நில அபகரிப்புக்கு உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்டு: எஸ்.ஐ தொடர்புடைய 5 இடங்களில் சிபிஐ சோதனை


சென்னை: சென்னை சோழிங்கநல்லூரை சேர்ந்தவர் கார்த்திக். இவருக்கு நீலாங்கரையில் 18.25 சென்ட் நிலம் உள்ளது. இந்த இடத்தை சிலர் ஆக்கிரமித்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து நீலாங்கரை காவல்நிலையத்தில் கார்த்திக் புகார் அளித்தார். ஆனால், புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, கார்த்திக், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அதில்,நிலத்தை அபகரித்தவர்களுக்கு நீலாங்கரை காவல் ஆய்வாளர் ஆனந்தபாபுஉடந்தையாக இருந்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி யிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ``நிலம் கார்த்திக்குச் சொந்தமானது என்பதற்கான அனைத்து முகாந்திரமும் இருப்பது தெரிந்தும் கண்களை மூடிக்கொண்டு நிலத்தை அபகரிக்க காவல் துறையினர் உதவியுள்ளனர்'' எனக் கண்டித்ததோடு, சிபிஐ இந்த வழக்கை விசாரித்து 4 மாத காலத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இது தொடர்பான விசாரணையைத் தொடங்கிய சிபிஐ, காவல் ஆய்வாளர் ஆனந்தபாபு மீது நில அபகரிப்பு வழக்கை பதிவு செய்தது.

இதையடுத்து, அண்ணாநகர் காவலர் குடியிருப்பில் உள்ள அவரது வீட்டில் நேற்று காலை 7.30 மணிமுதல் 6 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு அதிரடியாக சோதனை நடத்தினர். காவல் ஆய்வாளர் தொடர்புடைய அடையாறு சாஸ்திரி நகர், பெசன்ட்நகர் அடுக்குமாடிக் குடியிருப்பில் எஸ்பிஐ வங்கி பெண் அதிகாரி ஒருவர் வீட்டில் சோதனை நடத்தி, அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

மேலும், சோழிங்கநல்லூர் தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் உள்ள வீடு மற்றும் வேளச்சேரி நேரு நகர் பகுதியில் உள்ள வீடு ஆகிய 5 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்றது. மேலும் ஆனந்த் பாபுவின் வங்கிக் கணக்கு புத்தகம், சொத்துஆவணங்களையும் சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

x