திமுகவுக்கு எதிராக பாதயாத்திரை தொடங்கி இருக்கும் பாஜக தலைவர் அண்ணாமலை, “தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் 75 சதவீத கடைகளை மூடிவிட்டு, அதற்கு மாற்றாக தென்னை, பனங் கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும்” என பேசி இருக்கிறார். பயணத்தின் நடுவே பனை தொழிலாளர்கள் மத்தியில் பேசிய அவர், ‘’பாஜக ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் கள்ளுக்கடைகளை திறப்போம், ரேஷன் கடைகளில் சீனிக்கு பதில் பனங்கருப்பட்டி வழங்குவோம்’’ எனச் சொல்லி இருப்பதும் கவனம் பெறுகிறது.
அண்ணாமலையின் இந்த வாக்குறுதி, பனைத் தொழிலில் இருக்கும் ராமநாதபுரம் மாவட்ட மக்கள் மத்தியில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது? அந்த மாவட்டத்து மக்களில் சிலரிடம் பேசினோம்.
‘பனை எனும் கற்பகத்தரு’ என்ற அமைப்பின் நிர்வாகியான வழக்கறிஞர் கவிதா காந்தி, ‘’மாநில அரசின் மரமாக உள்ள பனை மரங்களின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் அரசிடம் இல்லை. இந்நிலையில் வேர் முதல் நுனி வரை பலன் தரக் கூடிய பனை மரங்கள் இன்று ஆயிரக்கணக்கில் அழிக்கப்பட்டு செங்கல் சூளைகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் விறகாகச் சென்று கொண்டு இருக்கிறது. இதற்குக் காரணம், பனையில் நிறைந்திருக்கும் மருத்துவ குணங்களை அறிந்து கொள்ளாததே ஆகும். பனங் கள்ளில் ஆல்கஹால் எந்த அளவுக்கு உள்ளது என ஆய்வு செய்யாமலேயே 1987-ல் அதற்கு தடை விதிக்கப்பட்டது. அதிலும் தமிழ் நாட்டில் மட்டும்தான் இந்த தடை உள்ளது.
பனையில் இருந்து பதனீர் இறக்க அனுமதி பெற்றிருந்தாலும் கூட அதில் ஈடுபடும் பனை தொழிலாளிகள் பல்வேறு இன்னலைச் சந்தித்து வருகின்றனர். ஒரு காலத்தில் பெண்களுக்கு வருவாயை ஈட்டித் தந்த பனைமரங்களின் பக்கம் அரசு தனது கவனத்தை திருப்பாததால் அவை எல்லாம் வெட்டி விறகாக சென்று கொண்டிருக்கிறது. இதனால் பனையை நம்பியிருந்த பல ஆயிரம் தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு குறைந்த ஊதியத்தில் கூலிகளாக சென்றுள்ளனர்.
இந்நிலையை மாற்ற பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள கருத்தை நாங்கள் முழுமையாக வரவேற்கிறோம். பனங் கள் விற்பனையும், நியாயவிலைக் கடைகளில் பனங்கருப்பட்டி விற்பனையும் தொடங்கப்பட்டால் பனையை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு சுயவேலை வாய்ப்பு கிடைப்பதுடன் அவர்களின் வாழ்வாதாரமும் வளம்பெறும்’’ என்று சொன்னார்.
பனங் கருப்பட்டி விற்பனை செய்துவரும் சாயல்குடியைச் சேர்ந்த அந்தோணி ராஜ், ‘’பனங் கருப்பட்டி தயாரிக்க தேவையான பதனீரை இறக்குவதற்காக ஒரு குடும்பத்தை சேர்ந்த கணவன் மனைவி இருவரும் அதிகாலை 2 மணிக்கு வேலைக்கு செல்பவர்கள் இரவு 10 மணிக்குத்தான் வீடு திரும்புவார்கள். இதன்படி 20 மணி நேரம் உழைத்து அவர்கள் உருவாக்கும் கருப்பட்டிக்கு உரிய விலை கிடைப்பதில்லை.
முன்பு 10 கிலோ கருப்பட்டி கொண்ட பெட்டி 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்று வந்தோம். ஆனால் அது தற்போது 1,700 ரூபாயாக குறைந்து விட்டது. இதற்குக் காரணம், பொது வெளியில் விற்பனையாகும் கருப்பட்டி மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாதுதான். இந்த நிலையில் அரசு மூலம் கருப்பட்டி விற்கப்பட்டால் மக்களுக்கு தரமான கருப்பட்டி கிடைப்பதுடன், கருப்பட்டி தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கும் நல்ல வருவாய் கிடைக்கும்.
குறைந்தபட்சமாக ஒரு ரேஷன் கார்டுக்கு கால் கிலோ கருப்பட்டி விற்பனை செய்தால்கூட மாதம் மாதம் ஆயிரக்கணக்கான கிலோ கருப்பட்டி தேவைப்படும். அப்படி தேவைப்படும் கருப்பட்டியை அரசாங்கம் நியாயமான விலையில் கொள்முதல் செய்வதன் மூலம் பனை தொழிலை நம்பி வாழும் குடும்பங்கள் வளம் பெறும்” என்றார்.
வேதாளையைச் சேர்ந்த பனை விவசாயி சதாசிவம் இதுகுறித்து நம்மிடம் பேசுகையில், ‘’பனங் கள் விற்பனை மற்றும் நியாய விலைக் கடைகளில் பனங் கருப்பட்டி விற்பனை குறித்து பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறோம். கலர் சாராயமான மது வகைகளால் தீமை உள்ளது. ஆனால் பனங் கள்ளில் தீமை ஏதும் இல்லை. பனைத் தொழிலும் ஒரு விவசாயம்தான். ஆனால் தமிழகத்தில் பதனீர் இறக்குவதிலேயே பிரச்சினை இருக்குது. பதனீர் இறக்குபவர்கள் மீது விஷ கள் விற்பனை செய்வதாக வழக்குப் போடுகிறார்கள். இதனால் பனை தொழில் அழிந்து வருகிறது. இதனால் சுமார் 3 ஆயிரம் பனை தொழிலாளர் கூட்டுறவு சங்கங்கள் இயங்காமல் முடங்கிக் கிடக்கிறது.
மாநிலம் முழுவதும் பனை தொழிலை நம்பி 17 லட்சம் குடும்பங்கள் உள்ளன. அதில் பெரும்பகுதியினர் பனைத் தொழிலை மேற்கொள்ள முடியாததால் மாற்றுத் தொழில் தேடி இடம் பெயர்ந்துவிட்டனர். தமிழகத்தில் சுமார் 2 கோடி குடும்ப அட்டைகள் உள்ளது. இதற்கெல்லாம் தலா ஒரு கிலோ பனங் கருப்பட்டி கொடுத்தாலே மாதம் 2 கோடி கிலோ கருப்பட்டி தேவைப்படும். இது மட்டும் நடந்தாலே அழிவின் விளிம்பில் இருக்கும் பனை தொழிலை நிச்சயமாக மீட்டெடுக்க முடியும்.
அதேபோல், பக்கத்து மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் எல்லாம் கள் இறக்க அனுமதி உள்ளபோது இங்கு மட்டும் தடை விதித்திருக்கிறார்கள். இதற்குக் காரணம், இங்கு அரசியல்வாதிகளே மது ஆலை நடத்தி வருவது தான். இலங்கையில் கூட பனங் கள்ளை பதப்படுத்தி டின்களில் அடைத்து 15 நாள் வரை வைத்திருந்து பயன்படுத்துகிறார்கள்.
எனவே, 17 லட்சம் பனை தொழிலாளர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் கள் இறக்கவும், ரேஷன் கடைகளில் பனங் கருப்பட்டி விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்க கோரி நாங்களே முதல்வரிடம் கோரிக்கை வைக்க உள்ளோம். எங்கள் கோரிக்கையை நிறைவேற்றி கொடுப்பவர்களுக்கு எதிர் வரும் காலங்களில் எங்கள் மக்கள் முழுமையான ஆதரவை தருவார்கள்’’ என்றார்.
பனையேறி குடும்பத்தைச் சேர்ந்த மணிமந்திரம் என்பவரிடம் அண்ணாமலையின் அறிவிப்பு குறித்து கேட்டதற்கு, ‘’பனை தொழிலை பாதுகாக்க வேண்டும் என பனை தொழிலாளர் நலவாரிய தலைவர் தொடங்கி, அதிமுக ஆட்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரை முறையிட்டும் எதுவும் நடக்கவில்லை. 4 சதவீதம் மட்டுமே ஆல்கஹால் உள்ள பனங் கள்ளால் உடலுக்கு எந்தத் தீங்கும் நேராது. மாறாக, உடலுக்கு வலுவைத்தான் தரும்.
அதே போல் சர்க்கரை நோயை ஊக்குவிக்கும் சீனிக்கு மாற்றாக பனங் கருப்பட்டி உள்ளது. பனங் கருப்பட்டியால் சர்க்கரை நோய் ஏற்படாது. எனவேதான் பனங் கருப்பட்டியை ரேஷன் கடைகளில் விற்பனை செய்யக் கேட்டு வருகிறோம். இதனால் மக்களின் உடல் நலம் பாதுகாக்கப்படுவதுடன் பனையேறிகளின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும். அந்த வகையில் அண்ணாமலையின் கருத்துக்கு எங்களின் முழு ஆதரவு உண்டு” என்றார்.
நடைபயணத்தில் அண்ணாமலை கொடுத்து வரும் வாக்குறுதிகள் குறித்து ராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளரும், எம்எல்ஏ-வுமான காதர்பாட்சா முத்துராமலிங்கத்திடம் பேசினோம். “ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவோம். ஒவ்வொருவருவர் வங்கி கணக்கிலும் 15 லட்ச ரூபாய் போடுவோம் என்பது போன்ற பொய்யான வாக்குறுதிகளை மக்களிடம் கொடுத்து ஆட்சிக்கு வந்தவர்கள் பாஜகவினர். ஆனால், ஆட்சிக்கு வந்ததும் பல வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மறந்து விட்டனர். இந்நிலையில் மக்களவை தேர்தல் வருவதால் மக்களை தங்கள் பக்கம் சாய்க்க ஊருக்கு ஒரு வாக்குறுதியைக் கொடுத்துச் செல்கிறார் அண்ணாமலை.
கருப்பட்டியை ரேஷன் கடைகளில் கொடுக்கும் திட்டத்தை முதலில் சொன்னதே திமுகதான். ஆட்சிக்கு வந்த பின் அதை முழுமையாக செயல்படுத்துவது குறித்து அரசு தரப்பில் தொடர்ந்து ஆலோசனை நடந்து வருகிறது. ஏனெனில் மாநிலம் முழுவதிலும் உள்ள ரேஷன் கடைகள் முழுமைக்கும் தேவையான கருப்பட்டி கொள்முதல் செய்ய வேண்டும். அதற்கும் மாதந்தோறும் எவ்வளவு கருப்பட்டி தேவைப்படும் என்பது குறித்து துறை ரீதியிலான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விரைவில் முதல்வர் நல்ல அறிவிப்பை வெளியிடுவார். அதே நேரத்தில் கள் விற்பனை என்பது அரசின் கொள்கை சார்ந்த முடிவாகும்.
எனவே அப்பாவி மக்களிடம் அண்ணாமலை அள்ளிவீசிச் செல்லும் வாக்குறுதிகளால் எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை. அவரது நடைபயணத்திற்கான பலன் வரும் மக்களவை தேர்தலுக்கு முன்னதாகவே வெட்ட வெளிச்சமாகிவிடும்’’ என்றார் அவர்.
அண்ணாமலை சொல்லி இருக்கும் விஷயத்தை அரசியல் பார்க்காமல் தமிழக அரசே நிறைவேற்ற முன் வந்தால் பனைத் தொழில் காக்கப்படுவதுடன் பனைத் தொழிலாளர்கள் வாழ்விலும் மறுமலர்ச்சி ஏற்படும்.
சம்பந்தப்பட்டவர்கள் யோசிக்கட்டும்!