மணிப்பூர் விவகாரம்; நாடாளுமன்றத்தை முடக்குவது ஏன்? - திருச்சி சிவா பேட்டி


திருச்சி சிவா

மணிப்பூர் விவகாரத்தால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் செயல்படமுடியாமல் முடங்கிக் கிடக்கின்றன. மணிப்பூரில் கொழுந்து விட்டெரியும் கலவரத்தை அடக்கத்தவறிய மத்திய- மாநில பாஜக அரசுகளை கண்டித்து எதிர்க்கட்சிகளின் எம்பி-க்கள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வருகை தந்து இதற்கு பதில்சொல்ல வேண்டும் என்ற எதிர்க்கட்சிகள் கோரிக்கையை பாஜக செவிமடுப்பதாகத் தெரியவில்லை.

எனினும், மணிப்பூர் விவகாரம் குறித்து குறுகிய கால விவாதம் செய்யலாம் என்று பாஜக இறங்கி வந்திருக்கிறது. எதிர்க்கட்சிகள் அதனை ஏற்க மறுத்து தொடர்ந்து நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்கச் செய்து வருகின்றனர். இதற்கு நடுவே, மோடி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது ஆகஸ்ட் 8-ம் தேதி விவாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தீர்மானத்தின் மீது ஆகஸ்ட் 10-ம் தேதி வரை மூன்று நாட்கள் விவாதம் நடைபெறும். அதன்பிறகு பிரதமர் மோடி ஆகஸ்ட் 10-ம் தேதி பதில் அளிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில், மணிப்பூர் விவகாரத்தை வைத்து நாடாளுமன்றத்தில் என்ன நடக்கிறது? எதிர்க்கட்சிகள் என்ன செய்கின்றன? என்ற கேள்விகளோடு திமுக கொள்கை பரப்புச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவாவிடம் பேசினோம்.

மணிப்பூர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் கருத்துகள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தை ஆரம்பத்தில் இருந்தே ஆழ்ந்த கவனத்துடன் அணுகி வருகிறது. தற்போது கூட இந்த விவகாரத்தில் மாநில அரசு தலையிடவில்லை என்றால் தாங்களே தலையிட நேரிடும் என்று உறுதிபட கூறியிருக்கிறது. அதனால் இது ஒரு நல்ல திசையில் நம்பிக்கைக்குரிய திசையில் செல்கிறது.

திருச்சி சிவா

இந்த விவகாரத்தில் பிரதமரின் அணுகுமுறை மிகவும் விமர்சனத்துக்கு உரியதாக மாறியிருக்கிறதே?

இதில் பிரதமர் அக்கறை காட்டாமல் இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. கிட்டத்தட்ட மூன்று மாதங்களைத் தொட்டுவிட்ட இந்தக் கலவர விவகாரத்தில் அவர் எந்தவிதமான அறிக்கையும் தரவில்லை. நாடாளுமன்றத்திற்கு வருவதும் இல்லை. அல்லது வந்து இது குறித்து அறிக்கை அளிக்கவோ, எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்கவோ இல்லை. அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிப்பது போன்ற எதையும் செய்யாதது மிகுந்த கவலை அளிக்கிறது.

பொதுவாக பிரதமரின் நாடாளுமன்ற நடவடிக்கைகள் எப்படி இருக்கின்றன?

இதுவரை அவர் நாடாளுமன்றத்திற்கு எத்தனை முறை வந்திருக்கிறார் என்பதே ஒரு கேள்வி. கடந்த ஒன்பது ஆண்டுகளில் அவரது வருகையை எண்ணுவதற்கு பத்து விரல்களே அதிகம் என்றுதான் நினைக்கிறேன்.

குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு வருவார். அதற்கு முன்பு எதிர்க்கட்சித் தலைவர் பேசும்வரை இருப்பார். அதற்குப் பிறகு எழுந்து வெளியே போய் விடுவார். கேள்வி நேரங்களில் அவருக்கான கேள்விகளுக்குக் கூட அவர் பதில் சொல்வதில்லை. எப்போதாவது வந்து அமர்ந்திருக்கும் நேரங்களில் கூட பதில் சொல்வதில்லை. துணை அமைச்சர்கள் தான் பதில் சொல்வார்கள்.

இதற்கு முன்பு எனக்குத் தெரிந்து எத்தனையோ பிரதமர்களை நான் பார்த்திருக்கிறேன். முக்கியமான விவாதங்களில் வந்து உட்கார்ந்து உறுப்பினர்கள் பேசுவதைக் கேட்டு சில நேரங்களில் குறுக்கிட்டு கேள்விகள் கேட்டிருக்கிறார்கள். இது போன்ற அவசர சூழ்நிலைகளுக்கு அவர்கள் அறிக்கை கொடுக்கிற காலமெல்லாம் இருந்திருக்கிறது. டாக்டர் மன்மோகன் சிங் தனிநபர் மசோதாவுக்குக் கூட அமர்ந்து, கேட்டு பதில் சொல்லுவார். இதெல்லாம் நேரு காலத்திலிருந்து நடந்திருப்பதாக சொல்வார்கள். எனக்கு தெரிந்தவரை பிரதமர்கள் இப்படித்தான் இருந்திருக்கிறார்கள்.

திருச்சி சிவா

ஆனால் தற்போதைய பிரதமர் மோடியோ, நாடாளுமன்றத்திற்கு வருகிறார்; அலுவலகத்தில் அமர்ந்திருக்கிறார். ஆனால், அவைக்குள் வருவதில்லை. இந்த விவாத முறைகளில் அவருக்கு நம்பிக்கை இல்லை என்பது போல நடந்து கொள்கிறார். அல்லது இவர்களுக்கு எதற்குப் பதில் சொல்ல வேண்டும் என்பதுபோல நடந்து கொள்கிறார். அவரது இந்த நடவடிக்கைகள் மிகவும் வருத்தத்துக்குரியது.

நாடாளுமன்ற ஜனநாயக முறையில் அரசாங்கம் என்பது சட்டம் இயற்றுகிற மன்றங்களுக்குக் கட்டுப்பட்டது. சட்டம் இயற்றுகிற மன்றங்கள் மக்களுக்குக் கட்டுப்பட்டவை. இது ஒரு சங்கிலித் தொடர் அமைப்பு. இதை மறந்து நடக்கிறது இன்றைய அரசு.

மணிப்பூர் விவகாரத்தில் குறுகிய கால விவாதம் நடத்தலாம் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. அதை ஏற்க எதிர்க்கட்சிகள் மறுப்பது ஏன்?

குறுகிய காலம் விவாதம் நடத்தலாம் என்று சொல்கிறார்கள். குறுகிய கால விவாதம் என்பது இரண்டரை மணி நேரம். நேரத்தை வேண்டுமானால் கொஞ்சம் அதிகரிக்கலாம். ஆனால், பதில் சொல்லுகிறபோது பதில் சொல்லாமல் போகலாம். ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்தி அவையை ஒத்திவைத்துவிட்டு செல்லலாம். நாங்கள் பேச வேண்டியது எல்லாம் பேசி முடித்திருப்போம். ஆனால், சரியான பதில் இருக்காது. எனவே தான் நாங்கள், பிரதமர் அவைக்கு வந்து அறிக்கை தர வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.

குறுகியகால விவாதம் என்பதும் அவையில் நடைமுறைதானே?

சாதாரணமாக கூட்டத்தொடர் நடக்கும்போது ஒவ்வொரு வாரமும் ஒரு குறுகிய கால விவாதம் நடத்தப்பட வேண்டும் என்பது நடைமுறையில் இருந்த ஒன்று. ஒவ்வொரு வாரமும் புதன் வியாழனில் ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம், ஒரு குறுகிய கால விவாதம் ஆகியவை நடைபெறும். ஆனால் தற்போது, அந்த பழக்கமெல்லாம் காற்றோடு போய்விட்டது. கவன ஈர்ப்பு தீர்மானமும் கிடையாது, குறுகிய கால விவாதங்களும் கிடையாது.

இப்போது அரசு முன்வரும்போது எதிர்க்கட்சிகள் அதை ஏற்க மறுக்கின்றனவே?

புவி வெப்பமடைதல் குறித்து ஒரு குறுகிய கால விவாதம். அதை நான் தான் பேசி துவக்கி வைத்தேன். நான் அதிக நேரம் பேசியதும் அதில்தான். பலரும் பேசினார்கள். ஆழமான விவாதம் நடந்தது. அதற்கு அந்த துறை அமைச்சர் அடுத்த வாரம் பதில் சொல்கிறேன் என்று சொல்லி இருந்தார். ஆனால், இதுவரை சொல்லவே இல்லை. புவி வெப்பமடைதல் என்பது உலகம் தழுவிய ஒரு பிரச்சினை. அதற்கு இந்திய அரசாங்கத்தின் பதில் சொல்லக்கூடிய இடத்தில் இருப்பவர்கள் பதில் சொல்லவில்லை. இதுபோல பல நேரங்களில் நடந்திருக்கிறதே.

இந்த குறுகிய கால விவாதங்களுக்கு பதில் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டுப் போவார்கள்; ஆனால் சொல்வதில்லை. அதனால்தான் இந்த குறுகியகால விவாதத்தை நாங்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறோம். மணிப்பூர் விவகாரம் ஒரு உணர்ச்சிபூர்வமான பிரச்சினை என்பதால் எங்களையெல்லாம் பேச வைத்துவிட்டு இறுதி நேரத்தில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்திவிட்டு பதில் சொல்லாமல் போய்விடுவார்கள்.

பிறகு என்னதான் செய்யவேண்டும் என்கிறீர்கள்?

அரசாங்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கிற பிரதமர் ஏன் அவைக்கு வரக்கூடாது... ஏன் விளக்கம் தரக் கூடாது என்பதுதான் எங்கள் கேள்வி.

ஜனநாயகம் என்பது பெரும்பான்மையின் ஆட்சி மட்டுமல்ல. சிறுபான்மையாக குறைந்த அளவில் இருக்கிற எதிர்க்கட்சிகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்; அவர்களின் கருத்துகளுக்கு அரசாங்கம் பொறுப்புணர்ச்சியோடு பதில் சொல்ல வேண்டும். இவையெல்லாம் தான் மரபு இவைதான் நடைமுறை. ஆனால், தற்போது இவை எதுவும் இல்லை, கிடையாது.

எதிர்க்கட்சிகள் தான் அவையை நடத்த விடாமல் குழப்பம் ஏற்படுத்துகிறார்கள் என்று சொல்கிறார்களே?

எதிர்க்கட்சிகள் ஒத்துக்கொள்ளவில்லை. குழப்பம் ஏற்படுத்துகிறார்கள் என்பது பரப்பப்படுகிற ஒரு தவறான தகவல். அவர்கள் பெயருக்கு விவாதம் நடத்த நினைக்கிறார்கள். நாங்கள் உணர்வுபூர்வமாக, ஆழமாக, அக்கறையோடு, உண்மையாக விவாதிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அதற்குப் பொறுப்போடு பிரதமர் நடந்துகொண்டால் எங்களுக்கும் அதைவிட அதிக பொறுப்பு வரும்.

x