உலகக்கோப்பை இறுதிப்போட்டி… இந்திய அணிக்கு அலர்ட் கொடுத்த முன்னாள் வீரர்!


உலகமே எதிர்பார்த்துள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோத உள்ளன. அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் இன்று மதியம் 2 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இரு அணிகளும் பலம் வாய்ந்தவை என்பதால், ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என இந்திய வீரர்களுக்கு, முன்னாள் வீரர் யுவராஜ் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்திய வீரர்கள் மிகவும் திறமையாக செயல்படுகின்றனர் என்று கூறியுள்ள யுவராஜ், நாம் எந்த தவறும் செய்துவிடக் கூடாது என கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த உலகக்கோப்பை தொடரில் இந்தியா ஆதிக்கம் செலுத்துகிறது. எனவே ஆஸ்திரேலியா அதற்கு தயாராக போட்டியை எதிர்கொள்ளும். எனவே, ஆஸ்திரேலிய வீரர்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயல்வார்கள். அதற்கு ஏற்ப இந்திய அணி செயல்பட வேண்டும் என யுவராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆட்டத்தின் அழுத்தத்தை எவ்வாறு சமாளிப்பது என ஆஸ்திரேலியாவுக்கு தெரியும். உலகக்கோப்பையை பல முறை ஆஸ்திரேலியா வென்றுள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில், அணியின் முக்கிய பேட்ஸ்மென்கள் அவுட் ஆனபோதும் பேட் கம்மின்ஸ் மற்றும் மிச்சேல் ஸ்டார்க் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் என்பதையும் யுவராஜ் குறிப்பிட்டுள்ளார்.

x