சென்னை, செங்கை, காஞ்சி, கோவையில் ரூ.850 கோடி முதலீட்டு ஒப்பந்தம்: சிகாகோவில் முதல்வர் முன்னிலையில் கையெழுத்து


சென்னை: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவையில் ரூ.850 கோடி முதலீடு தொடர்பாக சிகாகோவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் 3 முக்கிய நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக இளைஞர்களுக்கு அதிகவேலைவாய்ப்புகளை உருவாக்கவும், மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும் முதல்வர் ஸ்டாலின் தற்போது அமெரிக்கா சென்றுள்ளார்.

இந்த பயணத்தின்போது, சான்பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோவில் நடைபெற்ற நிகழ்வுகளில், ட்ரில்லியன்ட் உள்ளிட்ட உலகின்10 முன்னணி தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காலணி, விளையாட்டு ஆடைகள் தயாரிக்கும் ‘நைக்கி’, ஹெல்த்கேர் துறையில் உள்ள ‘ஆப்டம்’ ஆகிய உலகின் முன்னணி நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்த முதல்வர், தமிழகத்தில் புதியதொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார். அதன் தொடர்ச்சியாக, சிகாகோவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கடந்த 5-ம் தேதி லிங்கன் எலெக்ட்ரிக், விஷய் பிரிசிஷன் மற்றும் விஸ்டியன் ஆகிய 3 நிறுவனங்களுடன் மொத்தம் ரூ.850கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.500 கோடியில் லிங்கன் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் ஆராய்ச்சி, மேம்பாடு, உற்பத்தி மையத்தை விரிவாக்கம் செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. காஞ்சிபுரத்தில் ரூ.100கோடியில் சென்சார்ஸ், டிரான்ஸ்டியூசர்ஸ் உற்பத்தி மையம் அமைக்க விஷய் பிரிசிஷன் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்கையெழுத்தானது. சென்னை, கோவையில் ரூ.250 கோடியில்மின்னணு உற்பத்தி மையம் அமைக்க விஸ்டியன் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம்வேலைவாய்ப்புகள் பெருகும். இந்த நிகழ்வின்போது, தமிழக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தக துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா, துறை செயலர் வி.அருண் ராய், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் வே.விஷ்ணு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

x