கோவில்பட்டி: திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமி கூறினார்.
திருநெல்வேலியில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த அவர் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் இளம்பெண்ணை 6 பேர்கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. அந்தப் பெண் புகார் அளிக்க காவல் நிலையம் சென்றபோது பல மணி நேரம் காக்க வைக்கப்பட்டுள்ளார். திமுக ஆட்சியில் பெண்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை. அருப்புக்கோட்டையில் பெண் டிஎஸ்பிமீதான தாக்குதல், போலீஸுக்கேபாதுகாப்பு இல்லை என்பதை வெளிப்படுத்துகிறது.
மதுரை ஆவின் நிறுவனத்தில் நடந்த முறைகேடுகளை வீடியோவாக வெளியிட்டும் நடவடிக்கை எடுக்காத அரசு, வீடியோவை வெளியிட்ட ஊழியரை பணிநீக்கம் செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தருவைகுளம் மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏற்கெனவே முதல்வர் ஸ்டாலின் துபாய், ஜப்பான், சிங்கப்பூர், ஸ்பெயின் போன்ற நாடுகளுக்குச் சென்றபோது, எவ்வளவு முதலீடுகளைக் கொண்டுவந்தார் என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிடுமாறு வலியுறுத்தியும், இதுவரை வெளியிடவில்லை.
ஏற்கெனவே உள்ள தொழில் நிறுவனங்களை விரிவாக்கம் செய்வதற்குத்தான் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு வெளிநாடுகளுக்கு சென்றுஒப்பந்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை. அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், சிகிச்சை பெறச் சென்றுள்ளார். அதை மறைக்கவே, தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்றுள்ளதாக கூறுகிறார்கள். அதிமுக ஆட்சியில் மருத்துவத் துறையில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட்டன. தற்போது காலி பணியிடங்கள் அதிகம் உள்ளன. மருத்துவக்கல்லூரிகளுக்கு டீன் நியமிக்கவில்லை என உயர் நீதிமன்றமே கண்டித்துள்ளது. இவ்வாறு பழனிசாமி கூறினார்