மூணாறு: மூணாறில் குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்கக் கோரி நூதன போராட்டமாக பழுதடைந்த சாலையில் நீளம்தாண்டும் போட்டி நடைபெற்றது.
இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு தேயிலை தோட்டங்கள் அதிகம் உள்ள பகுதியாகும். மேலும் சர்வதேச சுற்றலா தலமாகவும் விளங்குகிறது. இந்நிலையில் சமீபத்தில் பெய்த கனமழையினால் இங்குள்ள பல சாலைகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறி விட்டன. அடிக்கடி இதுபோன்ற நிலை ஏற்படுவதால் ஜீப், ஆட்டோக்கள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் செல்வதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது.
ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் மனு அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை. ஆகவே இதனை கண்டிக்கும் வகையில் அகில இந்திய இளைஞர் கூட்டமைப்பு மூணாறு மண்டல கமிட்டி சார்பில் இன்று (செப்.6) நூதன போராட்டம் நடைபெற்றது. இதன்படி சைலண்ட்வாலி பகுதியில் உள்ள சாலையில் நீளம் தாண்டும் போட்டி நடைபெற்றது. மண்டல தலைவர் தமிழரசன் தலைமை வகிக்க, மாநிலக் குழு உறுப்பினர் ஆஷா ஆண்டனி தொடங்கி வைத்தார்.
போராட்ட குழுவினர் இந்த நீளம் தாண்டும் போட்டியில் கலந்து கொண்டனர். தூரத்தில் இருந்து ஓடி வந்து சாலையின் குழிகளை ஒவ்வொருவராக தாண்டினர். இதனை அளவீடு செய்து மதிப்பிடப்பட்டது. நிர்வாகிகள் பி.பழனிவேல், டி.சந்திரபால், ஜி.என். குருநாதன், ஜி.மோகன்குமார், ராஜா, டிமூர்த்தி, கார்த்திக், செபாஸ்டின், சுனில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து போராட்டக் குழுவினர் கூறுகையில், ”பலமுறை புகார் கூறியும் நடவடிக்கை இல்லை. குழியான சாலை தற்காலிகமாக மேவப்பட்டது. சாலை அமைப்பிலும், சீரமைப்பிலும் லட்சக்கணக்கான ரூபாய் மோசடி நடந்துள்ளது. இதனைக் கண்டித்து இந்த நூதன போராட்டத்தை நடத்தினோம்” என்று போராட்டக் குழுவினர் கூறினர்.