மதுரை: "மத்திய அரசு தமிழகத்துக்கு எந்த நிதியும் தராமல் அல்வா கொடுக்கிறது" என்று அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கூறினார்.
பி.கே.மூக்கையாதேவரின் 45-ஆவது நினைவு தினத்தையொட்டி உசிலம்பட்டி கல்லூரியில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், செல்லூர் கே.ராஜு, சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்பி.உதயகுமார், அமைப்பு செயலாளர் விவி.ராஜன் செல்லப்பா, தேனி மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.டி.கே.ஜக்கையன், தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் முருக்கோடை ராமர், மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரிய புள்ளான் என்ற செல்வம் மற்றும் அதிமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மகேந்திரன், தவசி, எஸ்.எஸ்.சரவணன், நீதிபதி, தமிழரசன்,மாணிக்கம், அண்ணாதுரை, கருப்பையா மற்றும் பலர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் திண்டுக்கல் சி.சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "பி.கே மூக்கையா தேவர் கல்விக்காக மட்டுமல்லாது பசும்பொன் தேவர் வழியில் சிறப்பாக பணி செய்து, தங்களை போன்றவர்களுக்கு எல்லாம் நல்லதொரு வழியைகாட்டியாக இருந்துள்ளார். கட்ச தீவுக்காக சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் மிகப்பெரிய போராட்டம் நடத்தி திறமையாக வாதாடினார். கல்வியில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தினார் மூக்கையா தேவர்.
தென்பகுதி மக்களுக்காக அர்ப்பணித்து வாழ்ந்த கல்வி தந்தை மூக்கையா தேவரின் பிறந்த நாள் விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் நீண்ட நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகிறார்கள். இந்த அரசு அதை காது கொடுத்து கேட்கவில்லை. 2026ம் ஆண்டு அதிமுக ஆட்சி அமைந்ததும், மூக்கையா தேவரின் பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக நிச்சயம் அறிவிப்பார்.
ஆட்சியாளர்கள் மூடி மறைக்க முடியாது. திமுக ஆட்சியில் மக்கள் வேதனைகளையும எண்ண முடியாது. மற்ற மாநிலங்களுக்கு ரயில்வே திட்டங்கள் என்றாலும், மெட்ரோ ரயில் திட்டம் என்றாலும், நிதி என்றாலும் அள்ளி அள்ளி வழங்கும் மத்திய அரசு தமிழகத்திற்கு திருநெல்வேலி அல்வா தான் தந்துள்ளது. மத்திய அரசு அல்வா கொடுப்பதை தவிர எந்த வேலையும் செய்யவில்லை" என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.