கொடைக்கானல் மலைப்பகுதியில் புலி, சிறுத்தை நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்


சிறுத்தை (இடது) | புலி (வலது)

கொடைக்கானல்: மேல்மலைப் பகுதியில் புலியும், கீழ் மலைப்பகுதியில் சிறுத்தையும் உலா வருவதால் பொதுமக்கள், மலை விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை வனப்பகுதியில் புலி, சிறுத்தைகள் இருப்பதாக கால் தடங்கள், எச்சங்கள் மூலம் தெரிய வந்தபோதும், அவற்றை காணும் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது. இந்நிலையில் கொடைக்கானல் அப்சர்வேட்டரி அருகே வனப்பகுதியில் உள்ள குண்டாறு நீர்த்தேக்கம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காட்டு யானைகள் முகாமிட்ட நிலையில், கடந்த சில தினங்களாக ஒற்றை புலி ஒன்று உலா வந்துள்ளது தெரியவந்தது. குண்டாறு நீர்த்தேக்கத்தில் இருந்து கொடைக்கானல் நகராட்சிக்கு நீர் எடுக்கப்படுவதால் அப்பகுதியில் நகராட்சி நிர்வாகம் சிசிடிவி கேமரா பொருத்தி உள்ளது.இந்த சிசிடிவி யில் குண்டாறு நீர்த்தேக்கம் பகுதியில் புலி நடந்து செல்வது பதிவாகியுள்ளது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், “குண்டாறு நீர்த்தேக்கத்தை ஒட்டியுள்ள வனப்பகுதி 1680 ஹெக்டேர் அடர்ந்த வனப்பகுதி என்பதால் புலி வசிப்பதற்கு ஏற்ற சூழல் உள்ளது. மேலும் ஒட்டுண்ணி தாவரங்கள் அதிகம் இருப்பதால் இந்த வனப்பகுதி மிக செழிப்பாக காணப்படுகிறது. குண்டாறு நீர் தேக்கத்திற்கு சென்று வரும் நகராட்சி பணியாளர்கள் மிகவும் பாதுகாப்பாக எச்சரிக்கையுடன் சென்று வரவேண்டும் என்றும் வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதேபோல் கொடைக்கானல் கீழ்மலைப்பகுதி பண்ணைக்காடு பகுதி அடிவாரம் மருதாநதி அணைக்கு மேல் உள்ள வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. இரவு நேரத்தில் இந்த சிறுத்தை தோட்டப்பகுதிக்குள் வந்து செல்வதால் மலையடிவாரத்தில் தோட்டம் வைத்துள்ள விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். இரவு நேரத்தில் வெளிவரும் சிறுத்தை அப்பகுதியில் உள்ள பாறைகள் நிறைந்த கரடு பகுதியில் பதுங்கி உள்ளது. இந்த சிறுத்தையின் நடமாட்டத்தை கண்டறிந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கு வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

x