சினிமா நடிகர்கள் ஆரம்பித்த கட்சிகள் என்ன ஆனது? - விஜய் மீது நாராயணசாமி தாக்கு


மதுரை: கடந்த காலங்களில் சினிமா நடிகர்கள் ஆரம்பித்த கட்சிகள் என்னவானது என எல்லோருக்கும் தெரியும். இருப்பினும், விஜய் கட்சி தொடங்கியதற்கு தனது வாழ்த்துகள் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தரிசனம் செய்தார். இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: "மோடி ஆட்சி மைனாரிட்டியோடு இருப்பதால் அவர் நினைத்ததை செய்ய முடியவில்லை. சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமாரை வைத்துக்கொண்டு ஆட்சி நடத்துகிறார். இந்தியா கூட்டணி பலமான எதிர்க்கட்சி. தங்கள் கொள்கைகளை மோடியுடன் கூட்டணியில் இருப்பவர்கள் கூறுகிறார்கள். மோடியால் தட்டிக் கேட்க முடியவில்லை. வக்பு வாரிய சட்டத் திருத்தம், சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட எதையும் பாஜக கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பதால் நிறைவேற்ற முடியாமல் பிரதமர் தவிக்கிறார்.

சாதிவாரி கணக்கெடுப்பை பாஜக கூட்டணிக் கட்சிகள் ஆதரிக்கும் சூழலில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆதரவு தெரிவிக்கிறார். இந்தியா கூட்டணி சாதிவாரி கணக்கெடுப்பை ஆதரிக்கும் நிலையில், இதற்கு மோடியின் பதில் என்ன? தன்னிச்சையாக எதையும் அவரால் செய்ய முடியவில்லை. கூட்டணி கட்சிகளும் நெருக்கடி கொடுக்கின்றன. அவர் 5 ஆண்டு நீடிப்பாரா என மக்கள் நினைக்கின்றனர். இதையெல்லாம் சகிக்க முடியாத மோடி, தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் தொல்லை கொடுக்கும் வகையில் செயல்படுகிறார். தமிழக வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டை, குந்தகம் விளைவிக்கிறார். அரசுக்கு எதிராக அறிக்கை விடுகிறார். இது நல்லதல்ல. தமிழக கல்வித் திட்டம் சரியில்லை என கூறி தேசிய கல்விக் கொள்கையை கொண்டுவர நினைக்கிறார். தமிழக பாடத்திட்டத்தில் படித்துதான் பல விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள், மருத்துவர்கள் உருவாகி இருக்கின்றனர்.

நானும் தமிழ்நாடு பாடத்திட்டத்தில் புதுச்சேரியில் கல்வி கற்றவன். தாங்கள் வளர்ச்சியடையவில்லை. ஆட்சி செய்யவில்லையா. கிரண் பேடியை வைத்து நான் முதல்வராக இருக்கும்போது, மோடி தொல்லை கொடுத்தார். ஒருபோதும் தமிழக மக்களை பாஜக ஏமாற்ற முடியாது. புதுச்சேரி , தமிழ்நாட்டில் எக்காலத்திலும் தாமரை மலராது. கடந்த காலங்களில் சினிமா நடிகர்கள் ஆரம்பித்த கட்சிகள் என்னவானது என எல்லோருக்கும் தெரியும். இருப்பினும், விஜய் கட்சி தொடங்கியதற்கு தனது வாழ்த்துகள். விஜய் கட்சியை காங்கிரசுக்கு அழைக்கும் அதிகாரம் தனக்கு இல்லை" என்று நாராயாணசாமி கூறினார்.

x