“முதல்வரின் அமெரிக்க பயணத்தால் தமிழகத்துக்கு அதிக முதலீடுகள்” - துரை வைகோ பெருமிதம்


திருநெல்வேலி: தமிழக முதல்வரின் அமெரிக்க பயணத்தின் மூலம் தமிழகத்திற்கு அதிக முதலீடுகளை கொண்டு வந்து, லட்சக் கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத்தரும் முயற்சி வெற்றி பெற்றுள்ளது என்று மதிமுக முதன்மை செயலர் துரை வைகோ எம்.பி கூறினார்.

திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்தில் மதிமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "பள்ளிகளில் ஆன்மிக வகுப்பு நடத்தப்பட்டுள்ளது தவறானது. இந்நிகழ்ச்சியை நடத்த யாரால் அனுமதிக்கப்பட்டது. எதனால் நடந்தது என்ற விசாரணை நடைபெறுவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் தமிழக முதல்வர் ஜப்பான், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று கோடிக்கணக்கான முதலீடுகளை கொண்டு வந்தார்.

பின்னர் சென்னையில் உலக தொழில் முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டு ரூ. 10 லட்சம் கோடிக்குமேல் முதலீடுகள் கொண்டு வரப்பட்டு முப்பது சதவீதத்திற்கு மேல் தற்போது அந்த நிறுவனங்கள் பணியை தொடங்கியுள்ளன. தமிழக முதல்வர் அமெரிக்க சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு அங்குள்ள முதன்மை நிறுவனத்தின் அதிகாரிகளை சந்தித்து சென்னை, கோவை, மதுரை போன்ற நகரங்களில் முதலீடுகளை கொண்டு வருவதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

அமெரிக்காவைச் சார்ந்த பன்னாட்டு நிறுவனங்கள் ரூ.2 ஆயிரம் கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. தமிழக முதல்வரின் அமெரிக்க பயணத்தின் மூலம் தமிழகத்திற்கு அதிக முதலீடுகளை கொண்டு வந்து லட்சக் கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொண்டு வரும் முயற்சி வெற்றி பெற்றுள்ளது. பி எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழகம் கையெழுத்திட வேண்டும் என மத்திய அரசு சொல்கிறது. தேசிய கல்விக் கொள்கை சார்ந்தது தான் பிஎம் ஸ்ரீ திட்டமும்.

பாஜகவை தவிர்த்த அனைத்து அரசியல் இயக்கங்களும் தேசிய கல்விக் கொள்கை தேவையில்லை என்ற நிலையோடு இருந்து வருகிறது. பி எம் ஸ்ரீ திட்டத்தின் மூலம் கல்வி வளர்ச்சி பெறுவதை வரவேற்கிறோம். பி எம் ஸ்ரீ திட்டத்தின் மூலம் தேசிய கல்விக் கொள்கையை ஊக்குவிப்பதை ஏற்க முடியாது. அதில் பல முரண்பாடுகள் உள்ளது. மாநில பாடத்திட்டமும், மத்திய பாடத்திட்டத்திற்கு நிகராக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மாநில பாடத் திட்டங்கள் தரம் உயர்த்தப்பட்டதால் நீட் தேர்வில் பல மாணவர்கள் தேர்ச்சி பெறும் நிலை உருவாகியுள்ளது" என்று துரை வைகோ கூறினார்.

x