2 தொகுதிகள் தான்... திமுக கறார்: பேச்சுவார்த்தைக்குச் செல்லாமல் விசிக நிர்வாகிகளுடன் திருமா ஆலோசனை!


நிர்வாகிகளுடன் திருமாவளவன் ஆலோசனை.

தொகுதிப் பங்கீடு குறித்து திமுகவுடன் இன்று காலையில் பேச்சுவார்த்தை நடைபெற இருந்த நிலையில் பேச்சுவார்த்தைக்கு செல்லாமல் என்ன முடிவு எடுப்பது என்பது குறித்து கட்சியின் நிர்வாகிகளுடன் திருமாவளவன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

ஸ்டாலினுடன் திருமாவளவன்

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் நான்கு தொகுதிகளை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று ஆரம்பம் முதலே கூறி வருகிறது. மூன்று தனித்தொகுதிகளும். ஒரு பொதுத் தொகுதியும் வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. ஆனால் திமுக ஒவ்வொரு கட்சிக்குமே கடந்த மக்களவைத் தேர்தலில் வழங்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கையிலேயே வழங்க முன் வந்துள்ளது. இதனால் முதல் இரண்டு கட்டப் பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

மூன்றாம் கட்டமாக நடந்த பேச்சுவார்த்தையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுடன் தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ளது. விடுதலை சிறுத்தைகள், மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் இன்று மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த திமுக அழைப்பு விடுத்திருந்தது.

திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள், தங்களுக்கு இரண்டு தனி தகுதிகள் மற்றும் ஒரு பொதுத் தொகுதி வேண்டும் என்று கேட்டிருந்தனர். ஆனால், பொதுத் தொகுதியோடு சேர்த்து இரண்டு அல்லது தனித் தொகுதிகள் இரண்டு மட்டுமே தருவோம் என்று திமுக உறுதியாக கூறிவிட்டது. இதையடுத்து இன்றைய பேச்சுவார்த்தையில் என்ன முடிவு எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து கட்சியின் தலைமை அலுவலகத்தில் திருமாவளவன் ஆலோசனை நடத்தி வருகிறார். சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது.

இரண்டு தொகுதிகள் மட்டுமே வழங்க முடியும் என்று திமுக கறாராக கூறிவரும் நிலையில் என்ன முடிவு எடுப்பது என்பது குறித்து திருமாவளவன் நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதால் அவரது முடிவு குறித்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்புடன் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

x