பரிதாப நிலையில் தாமிரபரணி பாசனக் கால்வாய்கள் - கட்டுப்பாடின்றி கழிவுகள் கலப்பு!


பாளையங்கோட்டையில் பாளையங்கால்வாயின் படித்துறை அருகே கொட்டப்பட்டுள்ள கழிவுகள். | படங்கள்: மு. லெட்சுமி அருண் |

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி பாசனக் கால்வாய்கள் பரிதாப நிலையில் காணப்படுவது குறித்து விவசாயிகளும், இயற்கை ஆர்வலர்களும் வேதனை தெரிவிக்கிறார்கள். தாமிரபரணியில் பல தடுப்பணைகள் உருவாக்கப்பட்டு, அதிலிருந்து பல கால்வாய்கள் பிரிக்கப்பட்டுள்ளது.

இந்த கால்வாய்கள் மூலம் பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் நேரடி பாசனம் பெறுகிறது. மேலும் இந்த கால்வாய்கள் மூலம் ஏராளமான குளங்களில் நீர் பெருகி நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கால்வரத்து குளங்கள் மூலமாகவும் பல்வேறு வகையான பயிர் சாகுபடி நடைபெறுகிறது.

8 அணைக்கட்டுகள்: தாமிரபணியில் மொத்தம் 8 அணைக்கட்டுகள் மற்றும் 11 கால்வாய்கள் உள்ளன. இந்த கால்வாய்கள் மூலம் 40,830 ஏக்கர், கால்வாய்கள் மூலம் நீர்பெருகும் குளங்கள் வாயிலாக 45,277 ஏக்கர் என மொத்தம் 86,107 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.

தாமிரபரணி நதி மட்டுமின்றி, அதிலுள்ள அணைக்கட்டுகள், கால்வாய்களின் கரைகளிலுள்ள எண்ணற்ற மரங்கள், தாவரங்கள், அதை நம்பி இருக்கிற உயிரினங்கள் மற்றும் ஆயிரக்கணக்கில் பல்வேறு வகையான பறவைகள் தங்குவதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும் மட்டுமின்றி, பிறநாட்டு பறவைகள் வலசை வருவதற்கும், பல்லுயிர் பெருக்கத்துக்கும் இந்த நீராதாரங்கள் இன்றியமையாததாய் இருக்கிறது.

பரிதாப நிலையில்... ஆனால், தாமிரபரணி ஆற்றின் குறுக்கேயுள்ள 8 அணைக்கட்டுகள் மற்றும் 11 கால்வாய்களின் தற்போதைய நிலைமை பரிதாபமாக உள்ளது. தூர்வாரப்படாமலும், ஆக்கிரப்புகளாலும், வேற்று தாவரங்களின் அடைப்பாலும், கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகள், இறைச்சி, மருத்துவ, ஆலை, செப்டிக்டேங்க் கழிவுகளாலும் இந்த நீராதாரங்கள் பாழ்பட்டு வருகின்றன.

தாமிரபரணி கரையோரங்கள், கால்வாய் பகுதிகள் திறந்தவெளி கழிப்பிடமாக்கபட்டுள்ள அவலம் தொடர்கிறது. தாமிரபரணியிலும் கால்வாய்களிலும் திறந்துவிடப்படும் கழிவுகளால் தண்ணீரின் தூய்மை கெட்டுவிட்டது.

இது தொடர்பாக இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது: 25 ஆண்டுகளுக்கு முன்பு இந்த 11 கால்வாய்களின் நீர், குடிக்க மட்டுமின்றி சமையலுக்காகவும் பயன்படுத்தப்பட்டது. விழா மற்றும் வீட்டு விசேஷங்களுக்கு தள்ளுவண்டி, மாட்டு வண்டிகள் மூலம் வாய்க்கால்களில் இருந்து தண்ணீரை சுமந்து கொண்டுபோய் உபயோகித்ததை காண முடிந்தது.

மேலும் ஓட்டல்களின் உபயோகத்துக்கு பெரும்பாலும் இந்த கால்வாய்களின் தண்ணீர் தான் உபயோகப்படுத்தப்பட்டது. அப்போது இந்த நீரால் எந்த வியாதியும், பாதிப்பும் வந்ததில்லை. ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது.

பாளையங்கோட்டையில் பாளையங்கால்வாயின் படித்துறை
அருகே கொட்டப்பட்டுள்ள கழிவுகள்.
| படங்கள்: மு. லெட்சுமி அருண் |

60% சாக்கடை கழிவு நீர் கலப்பு: சாக்கடை கழிவு நீர் 60 சதவீதம் நேரடியாக கால்வாய்களில் கலக்கின்றன. இவை ஒட்டுமொத்தமாக பல ரூபத்தில் சிறுசிறு ஓடைகள் மூலம் கடைசியாக தாமிபரணி ஆற்றில் தான் கலக்கின்றன. பாபநாசம் முதல் புன்னக்காயல் வரை இருகரைகளின் வழியாக 424 சிறிய, பெரிய ஓடைகள் மூலம் தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது. இதில் கழிவுநீர் முதல் எல்லா நீரும் அடங்கும்.

இந்த கால்வாய்கள் மூலம் நேரடிபாசனம் பெறும் வயல்கள், கால்வாய் மூலம் நீர்பெறும் குளங்களை நம்பிய வயல்வெளிகளிலும் இந்த ஒட்டுமொத்த கால்வாய் சாக்கடை கலந்த நீர்தான் ,நெல், கரும்பு, வாழை, கிழங்கு மற்றும் காய்கறி பயிர்களுக்கு பாய்ச்சப்படுகிறது.

மலடாகும் விளைநிலங்கள்: எண்ணற்ற கழிவுகளால் கால்வாய், குளம், நதி , வயல் வெளிகளில் மாசுபட்ட நீர் கலந்து பாதிக்கப்படுகின்றன. மாசுபட்ட நீரால் இருபோகம் விளையும் வயல்வெளிகள் மறைமுகமாக மலட்டுத் தன்மையை அடைந்துவருகிறது. இதன் விளைவாக பயிர்களின் விளைச்சல் பாதிப்பு அடைகிறது.

அதோடு பாதுகாக்கப்பட வேண்டிய நஞ்சை நிலங்கள் தரிசு நிலங்கலாக்கப்பட்டு அவற்றில் அடர்ந்த முட்செடிகள் வளர்ந்து விடுகின்றன. கூடவே அசல் நஞ்சை நிலங்கள் வீட்டுமனைகளாக்கப் படுகிறது. புதிய சாலை வழித்தடங்கள் போடப்படுவதால் சாலை ஓர நஞ்சை நிலங்கள் வீட்டுமனைகளாகவும், தொழிற்சாலைகளாகவும் மாற்றப்படுகிறது. இதனால் நல்ல நிலையில் உள்ள இருபோக நஞ்சை நிலங்களின் பரப்பு

ஆண்டுக்கு 1.5 சதவீதம் குறைந்துபோகிறது. இப்படி நஞ்சை ஆயக்கட்டு குறைந்து கொண்டே போனால் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் சூழ்நிலை எதிர்காலத்தில் உருவாகும் என்று வேதனை தெரிவித்தனர். நீராதாரங்களின் புனிதம் கருதி தாமிரபரணியிலுள்ள 11 கால்வாய்களையும் சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும். தாமிரபணியை மட்டும் சுத்தம் செய்வதால் ஒரு பயனும் இல்லை.

நதியை தூய்மை செய்த சிலகாலங் களில் மீண்டும் 11 கால்வாய்களின் ஒட்டுமொத்த கழிவுகளும், தாமிரபரணி நதியை தாக்கக் தொடங்கி, மீண்டும் நதியை பயனற்றதாக ஆக்கிவிடும். 11 கால்வாய்களும் நகர, கிராமப்புறங்களை ஒட்டியே செல்வதால், அங்குள்ள தெருக்களின் ஓடைகளில் சேரும் கழிவுகள், சாக்கடைகளை கால்வாய் மற்றும் நதியில் கலக்கவிடாமல் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே விவசாயிகள், இயற்கை ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

x