மழை காலங்களில் தனி தீவாகும் வரதராஜபுரம்!


சேதமடைந்த கரை பகுதி. | படங்கள்: எம்:முத்துகணேஷ் |

ஒவ்வொரு ஆண்டும் மழையால் அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வரதராஜபுரம் ஊராட்சி பகுதிகள் முழுவதும் தனி தீவாக மாறுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண அரசு போதிய நிதியை ஒதுக்கிடவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வேண்டுமென, அப்பகுதி மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

2015-ம் ஆண்டு முதல், கடந்த ஆண்டு வரை, வரதராஜபுரம் ஊராட்சி பகுதிகளில் ஒவ்வொரு மழையின் போதும், 10 அடி வரை தண்ணீர் சூழ்ந்து தீவுபோல் காட்சியளிக்கும். அந்த நேரத்தில் பொதுமக்கள் வீடுகளை காலி செய்து உறவினர் வீடு மற்றும், தனியார் விடுதிகளில் தங்கி விடுவர். வெள்ளம் வடிந்த பின் மீண்டும் தங்கள் வீடுகளில் அவர்கள் குடியேறுவார்கள். மழை பாதிப்பால் ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் ரூபாய்க்கான பொருளாதார இழப்பை இந்த பகுதி மக்கள் சந்திக்கின்றனர்.

சோமங்கலம் கிளை கால்வாய் மூலம் வரும் வெள்ள நீரை ரூ.40 கோடியில் பாதாள மூடு கால்வாய் மூலம் கொண்டு சென்றதால் பாதிப்புகள் குறைய தொடங்கியது. அதேபோல் அடையாறு கரையை பலப்படுத்துதல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், வெளி வட்ட சாலையில் உள்ள அடையாறு பாலத்தை அகலப்படுத்துதல், ஒரத்தூர் நீர்த்தேக்கம், வரதராஜபுரம் அணைக்கட்டு தாங்கல் போன்ற பணிகளை மேற்கொண்டால், வரதராஜபுரம், முடிச்சூர் பகுதிகளில் வெள்ள பாதிப்பு மேலும் குறையும். எனவே, தமிழக அரசு இந்த திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என அடையாறு கரையோர பகுதிகளில் வசிப்போர், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ராஜசேகர்

இதுகுறித்து வரதராஜபுரம் நலமன்றங்களின் கூட்டமைப்பு தலைவர் ராஜசேகர் கூறியது: கடந்த 2015-ம் ஆண்டு முதல் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். அரசு எடுக்கும் நடவடிக்கையால் ஒவ்வொரு ஆண்டும் பாதிப்புகள் குறைய தொடங்கியுள்ளது. நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே எங்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

அடையாறு ஆற்றில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை
சரி செய்யாமல் மண் மட்டும் கொட்டி வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஒவ்வொரு ஆண்டும் அடையாறு ஆற்றை தூர்வார வேண்டும், ஆற்றின் கரைகளை இருபுறமும் குடியிருப்பு பகுதிகளிலிருந்து, 10 அடி உயரத்திலும், 16 அடி அகலத்திலும் (Jeep Track) அமைக்கப்பட வேண்டும். இதன் மூலம் கரை உடைவது என்பதை முற்றிலும் தடுக்க முடியும். மேலும், வெள்ளம் ஏற்படுவதை தடுக்க அடையாறு ஆற்றின் கரைகளின் இருபுறமும் சில இடங்களில் மட்டுமே கான்கிரிட் தடுப்புச்சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதனால், கடந்த ஆண்டு வரதராஜபுரம் பகுதியில் தடுப்புச் சுவர்கள் இல்லாத இடங்களில் ஆற்றின் கரை உடைந்து வெள்ளம் குடியிருப்பு பகுதிகளை மூழ்கடித்தது. எனவே, ஆற்றின் கரைகள் இருபுறமும் முழுவதுமாக தடுப்புச்சுவர்கள் அமைப்பதுடன், ஏற்கெனவே உள்ள உயரத்தைவிட கூடுதலாக 4 அடி அதாவது, 10 அடி உயரத்துக்கு கான்கிரிட் தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட வேண்டும். அடையாறு ஆற்றோடு இணையும் நடுவீரப்பட்டு கால்வாயில் பல இடங்களில் கரையே இல்லை.

வரதராஜபுரம், ராயப்பா நகர் பகுதியில் அடையாறு ஆற்றில் புறவட்டச்சாலையில் கட்டப்பட்டுள்ள பாலத்தின் கீழ், நீர் வெளியேறும் பாதையின் அகலம் குறைவாக இருப்பதால், முடிச்சூர் மற்றும் வரதராஜபுரம் பகுதியில் வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, ராயப்பா நகரில், 400 அடி புறவட்டச் சாலையில் (Outer Ring Road - ORR) அடையாறு ஆற்றின் மேல், கூடுதலாக மற்றொரு நீர் வெளியேற்றும் வகையிலான தரைப்பாலம் கட்டப்பட வேண்டும்.

இதை நிறைவேற்றினால் வரதராஜபுரம் மற்றும் முடிச்சூர் பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதை தவிர்க்க முடியும். மேலும், அடையாறு ஆற்றின் நடுவில் மின் கம்பம் உள்ளது. இதனால் ஆகாய தாமரைகள் தடுப்பதால் தண்ணீர் செல்வதில் சிக்கல் உள்ளது எனவே மின் கம்பத்தை அகற்ற வேண்டும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரத்தூர் ஏரியில் உபரி நீரை சேமிக்கும் பணி நடந்து வருகிறது. ஏரியின் கொள்ளளவு, 2 முதல் 4 டிஎம்சிக்கு குறையாமல் இருக்கும் வகையில் மழைநீரை சேமித்தால் வெள்ளம் ஏற்படுவதை தடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

x