கோவை ரேஸ்கோர்ஸில் பிரமிப்பு சுழலும் உலக உருண்டை, ஜல்லிக்கட்டு காளை சிலைகள்!


கோவை ரேஸ்க கோர்ஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு காளையை வீரர் அடக்குவது போன்ற சிலையை திறந்துவைத்து பார்வையிட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உள்ளிட்டோர். | படங்கள்: ஜெ.மனோகரன் |

கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் நடைபாதையை ஒட்டிய பகுதியில், தலா ஒரு டன் எடை கொண்ட சுழலும் உலக உருண்டை, ஜல்லிக்கட்டு காளையை வீரர் அடக்கும் சிலைகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

கோவை மாநகரின் முக்கியப் பகுதிகளில் ஒன்றான ரேஸ்கோர்ஸில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள 3 கிலோ மீட்டர் தூரம் கொண்ட நடைபாதை உள்ளது. அரசு உயர் அலுவலர் அலுவலகங்கள், குடியிருப்புகள், தனியார் நிறுவனங்கள் இப்பகுதியில் உள்ளன. மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில், மத்திய அரசின் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் குளங்களின் கரைகளை பலப்படுத்தி மேம்படுத்துதல், மாதிரிச் சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ், ரேஸ்கோர்ஸ் நடைபாதை மேம்படுத்தப்பட்டது. மேலும், நடைபாதையை சுற்றிலும், மீடியா டவர், சிலைகள் அமைத்தல் உள்ளிட்ட பொழுதுபோக்கு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, தற்போது ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் சிலை, சுழலும் உலக உருண்டை சிலை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

இந்த கட்டமைப்புகளை ஏற்படுத்திவரும் திரைப்பட கலை இயக்குநர் சதீஷ்குமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: ரேஸ்கோர்ஸ் பகுதி, ஆங்கிலேயர்களின் ஆட்சியில் குதிரைப் பந்தயம் நடைபெறும் இடமாக இருந்தது.

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுழலும் உலக உருண்டை சிலை.

தற்போது காலச்சூழலுக்கு ஏற்ப பல்வேறு மாற்றங்களை அடைந்து வருகிறது. எனவே, இப்பகுதியின் வரலாற்றை மக்களுக்கு எடுத்துக் கூறும் வகையில், குதிரை பந்தயம் தொடர்பான சிலை அமைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ரேஸ்கோர்ஸில் இருந்து நீதிமன்றத்தை நோக்கி செல்லும் வழித்தடத்தில் ஜல்லிக்கட்டு காளையை வீரர் ஒருவர் அடக்கும் வகையிலான சிலை, உலக உருண்டை சிலை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

மேற்கண்ட இரு சிலைகளும் தலா ஒரு டன் எடை கொண்டவையாகும். பைபர், அலுமினியம், பித்தளை உள்ளிட்ட கலவைகளால் இவை தயாரிக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டுள்ளன. இதில், ‘நீரின்றி அமையாது உலகு’ என்ற கருத்தை கூறும்வகையில் இரு கைகளிலும் உலக உருண்டை இருப்பது போல, சுழலும் வகையில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இரு கைகளிலும் நீர் வழிந்தோடும் வகையில் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் வகையில் ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் சிலை அமைக்கப்பட்டுள்ளது. வெளியூரில் தயாரிக்கப்பட்டு, லாரி மூலம் எடுத்து வரப்பட்டு, கிரேன் பயன்படுத்தி இச்சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் இந்த சிலைகளை ஆர்வத்துடன் ரசித்து செல்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

x