சரசரவென குறைந்த பூண்டு விலை...இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!


பூண்டு

கிடுகிடுவென உயர்ந்து 600 ரூபாய் வரையில் விற்ற பூண்டின் விலை சரசரவென குறைந்து தற்போது 150 ரூபாய்க்கு விற்கப்படுவதால் இல்லத்தரசிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சமையலுக்கு மிகவும் அத்தியாவசியமானது பூண்டு. அது இல்லாமல் உணவு தயாரிப்பு என்பது நடக்காது என்ற நிலையில் கடந்த சில மாதங்களாக பூண்டின் விலை உயர்ந்து கொண்டே சென்றது. இதேபோல சின்ன வெங்காயத்தின் விலை உயர்ந்த போது பெரிய வெங்காயத்தை வாங்கி சமைத்து மக்கள் அட்ஜஸ்ட் செய்து கொண்டார்கள். ஆனால் பூண்டு விலை உயர்ந்த போது அதற்கு மாற்றாக எதையும் பயன்படுத்த முடியாததால் எவ்வளவு விலை கொடுத்தாவது பூண்டை வாங்கியே ஆக வேண்டிய கட்டாயத்தில் மக்கள் இருந்தார்கள்.

பூண்டு விலை உயர்வு காரணமாக மக்களின் மாதாந்திர பட்ஜெட்டில் துண்டு விழும் அளவுக்கு நிலைமை மாறிப்போனது. இதனால் பெரும் சிரமத்தில் இருந்த இல்லத்தரசிகள் தற்போது பூண்டு விலை மிகவும் குறைந்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தரமான பூண்டு விலை ஒரு மாதத்திற்கு முன்பு வரை 600 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் கடந்த 10 தினங்களுக்கு முன் அது 300 ரூபாயாக குறைந்தது. இந்த நிலையில் இன்று அது 150 ரூபாயாக விலை குறைந்துள்ளது.

மத்தியப்பிரதேசம், குஜராத், உத்தரப்பிரதேசம், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவில் பூண்டு சாகுபடி செய்யப்படுவதுடன் விளைச்சலும் அதிகமாகி உள்ளதால், தமிழ்நாட்டுக்கு வரத்தும் கூடியிருக்கிறது.. எனவே, பூண்டு விலை கிலோ ரூ.150 ஆக குறைந்துள்ளது. 600 ரூபாயிலிருந்து 20 நாட்களுக்குள் 150 ரூபாய்க்கு விலை குறைந்து உள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

x