அதிமுக - தேமுதிக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பிரேமலதாவின் நிபந்தனைகளால் பேச்சுவார்த்தை முடிவுக்கு வராமல் இழுத்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்ட அதிமுக, கடந்த மக்களவைத் தேர்தலில் தங்கள் கூட்டணியில் இருந்த அனைத்து கட்சிகளையும் தங்கள் பக்கம் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளது. ஆனால் அதே வேலையில் பாஜகவும் இறங்கியதால் கூட்டணியில் இருந்த கட்சிகளுக்கு எந்தப் பக்கம் செல்வது என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டது. இன்னொரு புறம் அவர்களுக்கு அதிக முக்கியத்துவமும் கிடைத்தது.
இந்த நிலையில் கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக் கட்சி உள்ளிட்ட சிறு சிறு கட்சிகளை பாஜக தன் பக்கம் இழுத்துள்ளது. பாமக மற்றும் தேமுதிகவை தங்கள் பக்கம் கொண்டு ஒரு முயற்சியில் அதிமுக இறங்கியது. அந்தக் கட்சிகளுடனான மறைமுக பேச்சு வார்த்தை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் இரண்டு கட்சிகளும் அதிமுக கூட்டணிக்கு வருவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தேமுதிகவுடனான மறைமுக பேச்சு வார்த்தைகள் முடிவடைந்து நேரடி பேச்சு வார்த்தையை அதிமுக நேற்று தொடங்கியது. நேற்றே ஒப்பந்தம் கையெழுத்து ஆகிவிடும் என்ற நம்பிக்கையில் அதிமுக குழுவினர் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் இல்லத்திற்கு சென்றனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தபடி ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. அதற்கு காரணமாக பிரேமலதாவின் பிடிவாதம் என்று கூறப்படுகிறது.
அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை குழு நிர்வாகிகளான முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, பெஞ்சமின், அன்பழகன் ஆகியோர், சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு நேற்று சென்றனர். அவர்களிடம் தொகுதி பங்கீடு பேச்சு நடத்தினார் பிரேமலதா.
அப்போது, மூன்று தொகுதிகள் தருவதாக அதிமுக தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், கடந்த மக்களவைத் தேர்தலைப் போலவே, நான்கு தொகுதிகள் வழங்க வேண்டும்; அதுவும், நாங்கள் விரும்பும் தொகுதிகளாக வேண்டும்; மாநிலங்களவை எம்.பி., பதவி தருவதாகவும் உறுதிமொழி அளிக்க வேண்டும் என பிரேமலதா தரப்பில் நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாக தெரிகிறது. அதனால் அடுத்த கட்ட பேச்சு வார்த்தையில் மற்ற விஷயங்களை முடிவு செய்து கொள்ளலாம் என்று அதிமுக அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரே முறை சந்திப்பில் தொகுதிப் பங்கீட்டை பேசி முடித்து, மூன்று தொகுதிகள் என்ற உடன்பாட்டில் கையெழுத்திட அழைக்கும் முடிவில் தான், அதிமுக குழுவினர் சென்றனர். ஆனால் அவர்கள் எதிர்பாராத விதமாக பிரேமலதாவின் கோரிக்கைகள் அமைந்ததால், 30 நிமிட சந்திப்பில் உடன்பாடு ஏற்படவில்லை. நான்கு தொகுதிகள் என்பதுடன், அவை எந்தெந்த தொகுதிகள் என்பதையும் பிரேமலதா உறுதியாக தெரிவித்துள்ளார்.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, விருதுநகர், கடலூர் ஆகிய நான்கு தொகுதிகளும் கட்டாயமாக தங்களுக்கு வேண்டும் என்றும் பிரேமலதா கேட்டுள்ளாராம். இதில் விருதுநகர் தவிர மற்ற மூன்று தொகுதிகளும் பாமகவும் தங்களுக்கு வேண்டும் என்று கேட்டுள்ளதாம். அது மட்டும் இல்லாமல் அதிமுகவிலும் இங்கு போட்டியிட பலரும் ஆர்வமாக உள்ளனர். எனவே இது பற்றி முடிவு செய்ய இயலாமல் குழுவினர் குழம்பிப் போயுள்ளனர். அதனால்தான் இது மரியாதையை நிமித்தமான சந்திப்பு என்று வேலுமணி செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த நிலையில் பாமகவுடன் நேரடி பேச்சுவாரத்தை நடத்திய பின்னர் இரண்டு கட்சிகளுக்குமான தொகுதிப் பங்கீடுகளை அதிமுக இறுதி செய்யும் எனத் தெரிகிறது.