புதுடெல்லி: அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் கீழமை நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 2006-11 திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருந்த தற்போதைய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, வருமானத்துக்கு அதிகமாக ரூ.76.40 லட்சம் அளவுக்கு சொத்து குவிப்பி்ல் ஈடுபட்டதாக அவர் மீதும், அவரது மனைவி மணிமேகலை மீதும் விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் கடந்த 2012-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் இருந்தது.
இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க கோரி தங்கம் தென்னரசு தாக்கல் செய்த மனுவை ஏற்ற நீதிமன்றம், தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவியை வழக்கில் இருந்து விடுவித்து கடந்த 2022-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.
இதேபோல, கடந்த திமுக ஆட்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராக இருந்த தற்போதைய வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி உள்ளிட்டோர் ரூ.44.57 லட்சம் அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் கடந்த 2012-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க கோரி சாத்தூர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை ஏற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை அமர்வு நீதிமன்றம், சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோரை வழக்கில் இருந்து விடுவித்து கடந்த 2023 ஜூலை மாதம் தீர்ப்பளித்தது.
இவ்வாறு 2 அமைச்சர்களையும் விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் மேல்முறையீடு செய்யாத நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து சீராய்வு மனுக்களை விசாரணைக்கு எடுத்தார். இரு தரப்பிலும் வாதங்கள் முடிந்த நிலையில், சொத்து குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் உள்ளிட்டோரை விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அமைச்சர்கள் மீதான வழக்குகளை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் மீண்டும் முதலில் இருந்து விசாரிக்க வேண்டும். இதற்காக, லஞ்ச ஒழிப்பு துறையினர் இந்த வழக்குகளை முடித்து வைத்து தாக்கல் செய்துள்ள அறிக்கைகளை கூடுதல் இறுதி அறிக்கைகளாக கருதி மறுவிசாரணை நடத்த வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த மறு விசாரணை உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று விசாரித்தது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், பிகே மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு நடத்திய இன்றைய விசாரணைக்குப் பின்னர், அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மீதான சொத்துக் குவிப்பு வழக்குகளை மீண்டும் விசாரணை நடத்த வேண்டும். இருவரும் ஶ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.