அச்சுறுத்தும் மரநாய்கள்; அலறும் கேரள அரசு... அரசு இல்லங்களை சீரமைக்க ரூ.50 லட்சம் ஒதுக்கீடு!


கேரளா மாநில தலைமைச் செயலகம்

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில், மரநாய்கள் மற்றும் பாம்புகளின் தொல்லையிலிருந்து மீள்வதற்காக அரசு அலுவலகங்களை சீரமைக்க 50 லட்சம் ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது.

கேரள மாநில தலைநகரான திருமணபுரத்தில் கன்டோன்மென்ட் பகுதியில் முதலமைச்சர், அமைச்சர்கள், ஆளுநர் மாளிகை, எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் வசிக்கும் வீடுகள் உள்ளது. பழமையான இந்த கட்டிடங்களில் பல கட்டிடங்கள் கடந்த பல ஆண்டுகளாக சேதமடைந்த நிலையில் இருந்து வருகிறது. அவ்வப்போது பொதுப்பணித்துறை சார்பில் இந்த வீடுகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே கடந்த சில ஆண்டுகளாக கன்டோன்மென்ட் பகுதியில் மரநாய்கள், பாம்புகள் மற்றும் கீரிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

இந்திய மரநாய்

இந்த மர நாய்கள் அவ்வப்போது முதலமைச்சரின் இல்லம் மற்றும் அமைச்சர்களின் வீடுகளுக்குள் புகுந்து வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு எதிர்க்கட்சித் தலைவரான வி.டி.சதீசன், செய்தியாளர்களிடம் பேசும்போது தனது வீட்டிலும் இதே போன்று மரநாய்கள் மற்றும் பாம்புகளின் நடமாட்டம் அடிக்கடி இருப்பதாக தெரிவித்திருந்தார். மேலும் அதிகாலை 4 மணிக்கு கூட்டமாக மரநாய்கள் ஒரு முறை தன்னை தூக்கத்திலிருந்து எழுப்பியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

கேரள முதலமைச்சர் இல்லம்

இந்த நிலையில் கேரள மாநிலத்தில் கடுமையான நிதி நெருக்கடி நிலவி வருவதால் மத்திய அரசிடம் கேரளாவிற்கான உரிய பங்குத் தொகையை வழங்க வேண்டும் என கேரள மாநில அரசு கோரிக்கை விடுத்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு, கேரளாவின் கடன் வாங்கும் உச்சவரம்பை குறைத்திருந்ததால், மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு வரை சென்றது.

இந்த நிலையில் நேற்றைய தினம் மத்திய அரசு மாநிலங்களுக்கான நிதியை விடுவித்திருந்தது. அந்த வகையில் கேரளாவிற்கு 4 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வந்ததால், இந்த மாதம் அரசு ஊழியர்களுக்கான சம்பளம், ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பலன்களை வழங்குவதில் சிக்கல் இருக்காது என அரசு அறிவித்திருந்தது.

இத்தகைய சூழலில் தங்களது அரசு வீடுகளை சீரமைக்க அரசு நிதி ஒதுக்கினால், அது சர்ச்சையை ஏற்படுத்தலாம் என பல அமைச்சர்களும் இது குறித்து பேசாமல் இருந்து வந்தனர். ஆனால் தற்போது தாங்க முடியாத அளவுக்கு மரநாய்கள் மற்றும் பாம்புகளின் நடமாட்டம் அதிகரித்திருப்பதால், கேரள அரசு சார்பில் பழமையான அரசு இல்லங்களை சீரமைக்க 48 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. பொதுப்பணித்துறை இந்த நிதியை கொண்டு அரசு இல்லங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆளுநர் மாளிகையில் மரநாய்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், ஆளுநர் ஆரிஃப் முகமது கான் நட்சத்திர விடுதிக்கு இடம்பெயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

x