10 மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் முடியும் வரை தமிழகத்தில் மின் நிறுத்தம் செய்யக்கூடாது என மின்வாரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவிட்டு உள்ளார்.
தமிழ்நாட்டில் தற்போதைய மின் தேவை 17 ஆயிரம் மெகாவாட்டில் இருந்து 18 ஆயிரம் மெகா வாட்டாக இருந்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் இந்த மின் தேவையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கோடைகாலங்களின் போது உச்சகட்ட மின் பயன்பாடு இருக்கும். தமிழ்நாட்டில் வரவிருக்கும் கோடைக்காலத்தின் போது தினசரி மின் தேவை 19 ஆயிரம் மெகாவாட்டிற்கும் மேல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் முந்தைய காலங்களில் கோடை காலங்களின்போது மின்வெட்டு குறித்து தொடர்ச்சியாக புகார்கள் எழுந்து வந்தது.
இந்த நிலையில் இது தொடர்பாக தமிழ்நாடு நிதித்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மின்வாரிய அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையின் போது தமிழ்நாட்டில் கோடைகாலத்தில் ஏற்படக்கூடிய மின் தேவை குறித்தும், தடையின்றி மின்சாரம் வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் 10 மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருவதால், தேர்வுகள் முடியும் வரை மின் நிறுத்தம் செய்யக்கூடாது என தலைமை பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வை பொறியாளர்களுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவிட்டார்.
தேர்வுகள் முடியும் வரை துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தினார். அரை மணி நேரத்திற்கும் மேலாக அடிக்கடி மின்வெட்டு ஏற்படும் இடங்களை கண்டறிந்து, அதனை உடனடியாக சிறப்புக் கவனம் செலுத்தி சீரமைக்க வேண்டும் என அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் கோடைக் காலத்தின் போது தடையற்ற மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் மின்வாரியம் மேற்கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
திருக்கடையூரில் தினகரன்... 60 வயது நிறைவையொட்டி மனைவியுடன் வழிபாடு!