வண்டலூர்: பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தின விழா வண்டலூரில் நேற்று நடைபெற்றது. இதில் 375 ஆசிரியர்களுக்கு விருது வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்தியாவில் தமிழகத்தில் தான்கல்வி முறை சிறப்பாக அமைந்துள்ளது என தெரிவித்தார்.
தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தின விழா நேற்று வண்டலூரில் உள்ள பி.எஸ். அப்துர் ரகுமான் கிரசன்ட் அறிவியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு ஆசிரியர்கள் 375 பேருக்கு டாக்டர். ராதாகிருஷ்ணன் விருது வழங்கினார். செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் 11 ஆசிரியர்களுக்கு விருது வழங்கினார். இதில் ஒருவர் மாற்றுத் திறனாளி ஆசிரியர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: விருது பெறும் அத்தனை ஆசிரியர்களுக்கும் ஒரு மாணவனாக எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஆசிரியர் பணி என்பது மற்ற பணிகளைப் போன்று கிடையாது. ஒரு தலைமுறையை உருவாக்கும் அறப்பணி ஆகும். கல்வி வழங்கும் உன்னதமான பணியைத் தான் ஆசிரியர்களாகிய நீங்கள் செய்து வருகிறீர்கள். மாணவர்களை சுயமாக சிந்திக்க வைக்கும் கல்விதான் சிறந்த கல்வி. அந்த வகையில் பார்த்தால், இந்தியாவிலேயே தமிழ்நாட்டின் கல்வி தான் சிறந்த கல்வி. தமிழ்நாடு பாடத்திட்டத்தை படித்த பலர்விஞ்ஞானிகளாக, மருத்துவர்களாக உள்ளனர்.
அரசுப் பள்ளியில் படித்த எத்தனையோ மாணவ, மாணவிகள் இஸ்ரோ போன்ற நிறுவனங்களில் உயர் பதவி வகித்துள்ளனர். இதற்கெல்லாம் காரணம் ஆசிரியராகிய நீங்கள்தான். மனிதர்களுக்கு மட்டுமே சிந்திக்கும் திறமை உள்ளது. அந்த சிந்தனையை தூண்டும் ஆற்றல் ஆசிரியர்களிடம் மட்டுமே உள்ளது. ஆரோக்கியமான மாணவரால் மட்டுமே நன்றாக படிக்க முடியும். ஆரோக்கியம் காக்க நன்றாக விளையாட வேண்டும். ஆசிரியர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் தமிழக முதல்வர் தனி கவனம் செலுத்தி பரிசீலித்து வருகிறார். அவை விரைவில் நிறைவேற்றித் தரப்படும் என்றார்.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசும்போது, “தத்துவவியலாளர் பிளட்டோவின் கூற்றுப்படி இரண்டு கால் உள்ள விலங்குக்கு கல்வி கொடுத்து அவனை மனிதன் ஆக்குபவர்கள்தான் ஆசிரிய பெருமக்கள். அனைத்து மதத்தினரும் கொண்டாடப்பட வேண்டிய திருவிழா இந்த ஆசிரியர் தினம்தான்” என்றார்
விழாவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், மக்களவை உறுப்பினர் செல்வம், எம்எல்ஏக்கள் எஸ்.ஆர்.ராஜா, வரலட்சுமி, எழிலரசன், சுந்தர் மற்றும் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் லியோனி, பள்ளிக் கல்வித் துறை அரசுச் செயலாளர் சோ.மதுமதி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் பொ. சங்கர், செங்கை ஆட்சியர் ச.அருண்ராஜ், பள்ளிக்கல்வித் துறை இயக்குநர்கள் கண்ணப்பன், மு. பழனிச்சாமி, நரேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்