ஜிஎஸ்டியால் விலைவாசி கட்டுக்குள் வந்துள்ளது: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம்


சென்னை: ஜிஎஸ்டி மூலம் அனைத்து பொருட்களின் விலையும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்று சென்னையில் நடந்த கருத்தரங்கில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள், பட்டய கணக்காளர்கள் அங்கம் வகிக்கும் ரெவின்யூ பார் அசோசியேஷன் சார்பில் வருவாய், வரி விதிப்பு கொள்கைகள் தொடர்பான கருத்தரங்கு சென்னை லீலா பேலஸில் நடைபெற்றது. சங்கத் தலைவர் எஸ்.ஸ்ரீதர் தலைமை வகித்தார். இதில், ‘2047-ம் ஆண்டை நோக்கிய இந்தியாவின் எதிர்கால வளர்ச்சி பாதையில் மத்திய நிதி அமைச்சரின் நுண்ணறிவு’ என்ற தலைப்பில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:

இந்தியாவில் டிஜிட்டல் தொழில்நுட்ப புரட்சி அபரிமிதமாக வளர்ச்சிகண்டுவருகிறது. வரி விதிப்புநடைமுறைகளில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில்நுட்பத்தை முழுமையாக செயல்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம்.

ஜிஎஸ்டி வரி விதிப்பை அறிமுகம் செய்தபோது, இல்லாத ஒன்றை புதிதாக விதிப்பதுபோல வதந்தி பரப்பினர். ஆனால், அதன்உண்மையான பயனை தற்போதுஅனைவரும் உணர்ந்துள்ளனர். ஜிஎஸ்டி மூலம் அனைத்து பொருட்களின் விலையும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஜிஎஸ்டியில் மாற்றம் கொண்டு வருவதுகுறித்தும் நல்ல பல ஆலோசனைகளை திறந்த மனதுடன் வரவேற்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் சார்பில் சங்க நிர்வாகிஜெயக்குமார் கேட்ட கேள்விகளுக்கு நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். முன்னதாக, ரெவின்யூ பார் அசோசியேஷன் சங்க துணை தலைவர் டி.ஆனந்த் வரவேற்றார். கருத்தரங்கின் நோக்கம் குறித்து அமைப்பு குழு தலைவர் டி. பானுசேகர் எடுத்துரைத்தார். செயலாளர் டி.வாசுதேவன் நன்றி கூறினார். இந்த நிகழ்வில் தமிழக பாஜக ஒருங்கிணைப்பாளர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஊறுகாய் போடுவதில்... கருத்தரங்கில் நிர்மலா சீதாராமன் பேசியபோது, ‘‘ஒரே நாடு ஒரே வரி திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த முடியுமா, முடியாதா என்றால் இரண்டுக்குமே என்னிடம் பதில் உள்ளது. 60 சதவீத நுகர்பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதத்துக்கும் கீழாக குறைந்துள்ளது. இன்னும் அதிகமாக பேசினால் ‘ஊறுகாய் போடுகிறவங்கள கொண்டுபோய் நிதி அமைச்சர் ஆக்கினா இப்படித்தான் ஆகும்’ என்று பலர் விமர்சனம் செய்கின்றனர். அதுபற்றியெல்லாம் நான் கவலைப்படுவது இல்லை. ஏன் ஊறுகாய் போடுபவர் நிதி அமைச்சராக வரக்கூடாதா? ஊறுகாய் போடுவதை நான் ஒருபோதும் கவுரவ குறைச்சலாக பார்ப்பது இல்லை. என்னை பொறுத்தவரை, நிதி அமைச்சராக இருந்து மக்களுக்கு சேவை செய்வது போலத்தான் அதுவும்’’ என்றார்.

x