மேம்பாலப் பணியால் மதுரையில் இருந்து ரிங் ரோடு செல்லும் தென்மாவட்ட வாகனங்கள் திணறல்


மதுரை: மதுரை மேலமடை சந்திப்பு மேம்பாலப் பாலம் பணியால் லேக்வியூ சாலை ஒரு வழிச்சாலையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனால், சுந்தரம் பார்க் வழியாக அண்ணாநகருக்கும், ரிங் ரோடு வழியாக சிவகங்கை மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

மதுரை மாட்டுத்தாவணி சாலை, அண்ணாநகர் சாலை, ஆட்சியர் அலுவலகம் சாலை மற்றும் ரிங் ரோடு சாலை ஆகிய நகரின் பிரதான சாலைகளை இணைக்கும் முக்கிய சந்திப்பாக மேலமடை சிக்கனல் சந்திப்பு உள்ளது. இந்த சந்திப்பு, மிக குறுகிய பகுதியாக இருப்பதால் சிறு விபத்து, போக்குவரத்து சிக்கல் ஏற்பட்டால் கூட பல கி.மீ., தொலைவுக்கு வாகனங்கள் நெரிசலில் தத்தளிக்கும். அதனால், நகரின் பிற சாலைகளிலும் போக்குவரத்து ஸ்தம்பிக்கும்.

மேலமடை சிக்னல் சந்திப்பு பகுதியைச் சுற்றி, ஏராளமான மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், வர்த்தக நிறுவனங்கள், குடியிருப்புகள் உள்ளதால் போக்குவரத்து நெரிசலால் பலரும் தினமும் பாதிக்கப்பட்டு வந்தனர். அதுபோல், அண்ணா பஸ்நிலையம் வழியாக ரிங் ரோடு சென்று சிவகங்கை, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கான போக்குவரத்தும் அடிக்கடி பாதிக்கப்பட்டன.

அதனால், மேலமடை சந்திப்பு வழியாக ஆட்சியர் அலுவலகம் பகுதியில் இருந்து ரிங் ரோடு சாலையில் கோமதிபுரம் வரை மாநில நெடுங்சாலைத்துறையால் மேம்பாலம் கட்டப்படுகிறது. இந்த பாலம் கட்டுமானப்பணியை முடிந்து செயல்பாட்டிற்கு வந்தால் வெளிமாவட்ட வாகனங்கள் மேம்பாலம் வழியாக சென்றுவிடும் என்பதால் அண்ணாநகர், கே.கே.நகர், லேக்வியூ சாலை, ஆட்சியர் அலுவலகம் போன்ற பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறையும்.

இந்நிலையில், இந்த மேம்பாலம் பணிக்காக, மாட்டுத்தாவணி சாலையில் இருந்து மேலமடை சிக்னல் வரும் லேக்வியூ சாலை தற்காலிகமாக ஒரு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. மாட்டுத்தாவணியில் இருந்து வரும் வாகனங்கள், சுந்தரம் பார்க் வாசலில் கே.கே.நகர் 80 அடி சாலையை நோக்கி திருப்பிவிடப்படுகின்றன. சுந்தரம் பார்க் வாசலில் இருந்து மேலமடை சந்திப்பு வரை இரு சக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன.

அதேசமயம் அண்ணாநகரில் இருந்தும், ரிங் ரோடு வழியாக லேக்வியூ வரும் வாகனங்கள் மட்டும் மாட்டுத்தாவணியை நோக்கி அனுமதிக்கப்படுகின்றன. மேம்பாலப் பணியுடன் சேர்ந்து மேலமடை சிக்னல் அருகே உள்ள தரைப்பாலமும் பலப்படுத்தப்பட்டு அந்த சாலை அகலப்படுத்தும் பணியும் நடக்கிறது. ஏற்கெனவே மேலமடை சிக்கனல் தரைப்பாலம் குறுகலாக இருப்பதாலே இந்த ஒரு வழிப்பாதை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால், சில நேரங்களில் சுந்தரம் பார்க் முதல் மேலமடை சிக்னல் வரையிலான வணிக வளாகங்கள், மருத்துவமனைகளில் இருந்து வரும் நான்கு சக்கர வாகனங்கள், மேலமடை சிக்னல் வழியாக வந்துவிடுகின்றன. அதனால், அண்ணாநகரில் இருந்து மாட்டுத்தாவணி செல்லும் வாகனங்கள், மேலமடை சிக்கனல் தரைப்பாலத்தை கடந்து செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.

அதுமட்டுமில்லாமல், கே.கே.நகர், மாட்டுத்தாவணி, லேக்வியூ சாலை போன்ற பகுதியில் வசிக்கும் தொழிலாளர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள், நேரடியாக மேலமடை சிக்னல் வழியாக செல்ல முடியாமல் கே.கே.நகர் 80 அடி சாலையை சுற்றி மீண்டும் மேலமடை சிக்கனல் வழியாக ரிங் ரோட்டிற்கும், அருகில் உள்ள அண்ணாநகருக்கும் செல்ல வேண்டிய உள்ளது.

லேக்வியூ சாலை வழியாக மேலமடை சிக்கனல் வரை செல்லும் சாலை ஒருவழிச்சாலையாக மாற்றியதன் காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைவதால் மேலமடை சிக்கனல் பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஏனெனில், மேலமடை சிக்னல் மதுரையின் பிரதான சந்திப்பாகவும், அதிகளவு வெளிமாவட்ட வாகனங்கள், உள்ளூர் வாகனங்கள் கடந்து செல்லும் சந்திப்பாகவும் திகழ்வதால் அன்றாடம் இந்த சந்திப்பை கடந்து செல்வது வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கு சவாலாக உள்ளது.

x