ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்தும் பதிலடியும் முதல் புதிதாக 3 டோல்கேட் வரை: டாப் 10 விரைவுச் செய்திகள் 


“தமிழக அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் மிகவும் மோசம்” - ஆளுநர்: ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற ‘எண்ணி துணிக’ நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என். ரவி, “தமிழகம் கல்வியில் சிறந்து விளங்க மிகச் சிறந்த அடித்தளம் அமைத்தவர் முன்னாள் முதல்வர் காமராஜர். அவர்தான் மாநிலத்தின் பல பகுதிகளிலும் பள்ளிகளை அமைத்தார். தொலைதூரம் சென்று கல்வி கற்கும் நிலையை மாற்றினார். துரதிருஷ்டவசமாக அந்த அடித்தளம் இன்று பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில்தான் 60% மாணவர்கள் படிக்கிறார்கள். அரசு பள்ளிகளில் கல்வித் தரம் மிகவும் கீழே சென்றுள்ளது. தேசிய சராசரியைவிட அது குறைவாக உள்ளது.

அரசுப் பள்ளிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 75% மாணவர்களால், இரட்டை இலக்க எண்களைக்கூட புரிந்துகொள்ள முடியவில்லை. 40% மாணவர்களால் அவர்களது பாடப்புத்தகங்களைக்கூட படிக்க முடியவில்லை. ஓர் ஆய்வு இதனை தெரிவிக்கிறது. கற்பித்தல் குறைபாடே இதற்குக் காரணம். ஆனால், எந்த கட்டுப்பாடும் இல்லாமல் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்படுகிறது. அவர்கள் பட்டப்படிப்பு படித்து முடிக்கிறார்கள். இது நாட்டுக்கு ஆபத்தான நிலையை ஏற்படுத்தக்கூடியது. சான்றிதழ்களை வைத்துக்கொண்டு பல இளைஞர்கள் வேலை கிடைக்காமல் தவிக்கிறார்கள். கல்வியில் ஏற்பட்டிருக்கும் இந்த பின்னடைவை நாம் மறுக்க முடியாது” என தெரிவித்தார்.

“ஆளுநருக்கு முழுமையாகத் தெரியுமா?”- அப்பாவு : தமிழகத்தின் பாடத்திட்டம் குறித்து தமிழக ஆளுநருக்கு முழுமையாகத் தெரியுமா அல்லது சந்தேகக் கண்களுடன் பார்க்கிறாரா எனத் தெரியவில்லை என சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு சந்தேகம் எழுப்பியுள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அப்பாவுவிடம் மாநில பாடத்திட்டம் குறித்து ஆளுநர் விமர்சனம் செய்துள்ளது குறித்து கேட்டதற்கு, “ஆளுநர் ரவி இதுபோன்ற தர்க்கமான வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது என பல சந்தர்ப்பங்களில் கூறியுள்ளேன். தமிழ்நாட்டின் பாடதிட்டம் குறித்து ஆளுநருக்கு முழுமையாகத் தெரியுமா அல்லது சந்தேகக் கண்களுடன் பார்க்கிறாரா எனத் தெரியவில்லை.

‘சந்திரயான் 3’ திட்டம் உலகமே வியக்கும் அளவுக்கு பெருமை சேர்த்தது. வீரமுத்துவேல் என்பவர் இந்தத் திட்டத்தின் இயக்குநராக இருந்தவர். அவர் தமிழ்வழி கல்வி கற்றவர். அரசுப் பள்ளியில் பயின்றவர். இவர் மட்டுமல்ல இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய முன்னாள் தலைவர் சிவன், அதேபோல் இயக்குநராக இருந்த மயில்சாமி அண்ணாதுரை, தற்போதுள்ள வனிதா, நிகர் ஷாஜி, நாராயணன், ராஜராஜன், சங்கரன் உள்ளிட்ட விஞ்ஞானிகளில் 90 சதவீதம் பேர் தமிழ்வழியில் பயின்றவர்கள், இவர்கள்தான் உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் உள்ளனர். இது ஆளுநருக்கு தெரியாதா?” என்றார்.

“சுயமாக சிந்திக்க வைக்கும் கல்விதான் சிறந்தது” - உதயநிதி: தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆசிரியர் தின விழா கலந்துகொண்டு, 375 ஆசிரியர்கள்களுக்கு டாக்டர். இராதாகிருஷ்ணன் விருதினை வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “மாணவர்களை சுயமாக சிந்திக்க வைக்கும் கல்விதான் சிறந்த கல்வி. அந்த வகையில் பார்த்தால், இந்தியாவிலேயே தமிழகத்தின் கல்வி தான் சிறந்த கல்வி. தமிழகத்தின் பாடத்திட்டத்தை படித்த பலர் விஞ்ஞானிகளாக, மருத்துவர்களாக உள்ளனர். சிலர் இதை பொறுத்துக்கொள்ள முடியாமல், வயிற்று எரிச்சலில் உள்ளனர்” என்று ஆளுநருக்கு பதிலடி தரும் வகையில் பேசினார்.

“தவெக மாநாட்டுக்கு அனுமதி தருவதில் என்ன பிரச்சினை?” -இதனிடையே, “விஜய்யின் கட்சி மாநாட்டுக்கு அனுமதி தருவதில் இந்த அரசுக்கு என்ன பிரச்சினை? ஜனநாயக நாட்டில் கட்சி நடத்த எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. ஏன் அனுமதி மறுக்கிறீர்கள்? யார் வளர்ச்சியையும் யாரும் தடுக்க முடியாது,” என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

“விஜய் கட்சியை தடுத்து நிறுத்துவது திமுக நோக்கம் அல்ல” - “தமிழக வெற்றிக் கழகத்தை தடுத்து நிறுத்துவது திமுகவின் நோக்கம் அல்ல. அரசியல் கட்சிகள் தொடங்குவது அவர்களின் ஜனநாயக உரிமை. தமிழர்களின் உரிமைக்காக, வாழ்வாதாரத்துக்காக திமுக பாடுபட்டு வருகிறது. ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக திமுக தொடங்கப்படவில்லை. தமிழர்களுக்காக தொடங்கப்பட்ட கட்சியாகும்” என்று அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.

“மோடி மன்னிப்புக் கேட்க வேண்டியது...” -நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பாஜக வெறுப்பை பரப்பி வருகிறது என்று மகாராஷ்டிராவில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். சிலை உடைந்த விவகாரம் குறித்து கொந்தளித்த அவர், “சிவாஜி மகாராஜை பிரதமர் மோடி அவமதித்துள்ளார். அவர் சிவாஜி மகாராஜிடம் மட்டுமல்ல, மகாராஷ்டிராவின் ஒவ்வொருவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.

கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கில் லஞ்ச புகார்: கொல்கத்தாவில் பணியில் இருந்த பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்ட விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாக மாறிவருகிறது. கொல்கத்தா காவல் துறை தங்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியா - சிங்கப்பூர் இடையே 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: இரண்டுநாள் பயணமாக புதன்கிழமை சிங்கப்பூர் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, வியாழக்கிழமை அந்நாட்டு பிரதமர் லாரன்ஸ் வோங் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, இரு நாடுகளுக்கு இடையே நான்கு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், செமிகண்டக்டர் துறை, சுகாதாரம் மற்றும் மருத்துவம், கல்வி மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து: “ஊறுகாய் போடுவதையும், நிதியமைச்சராக பதவி வகித்து மக்களுக்கு சேவையாற்றுவதையும் நான் ஒருபோதும் கவுரவ குறைச்சலாக பார்ப்பதில்லை,” என்று சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

தமிழகத்தில் மேலும் 3 இடங்களில் சுங்கச் சாவடிகள்: நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்தி வரும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சாலையை பயன்படுத்துவோரிடம் இருந்து சுங்கக்கட்டணம் வசூலித்து வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை, 67 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு, கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இக்கட்டணங்கள், ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் உயர்த்தப்படும். அந்த வகையில், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ஏப்ரலில் உயர்த்தப்பட வேண்டிய கட்டணம் ஜூன் மாதம் உயர்த்தப்பட்டது.

இந்தச் சூழலில், தமிழகத்தில் சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையை 67-ல் இருந்து 70 ஆக இந்திய நெடுஞ்சாலை ஆணையம் உயர்த்தியுள்ளது. இதற்கான அறிவிப்பும், கட்டண விவரம் வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக, விழுப்புரம் மாவட்டம் நங்கிளி கொண்டான், திருவண்ணாமலை மாவட்டம் கரியமங்கலம், கிருஷ்ணகிரி மாவட்டம் நாகம்பட்டி ஆகிய 3 இடங்களில் புதிய சுங்கச்சாவடிகள் அமைத்து கட்டண விவரங்களை வெளியிட்டுள்ளது தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்.

x