ஜாபர் சாதிக்கின் ரூ.55 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி


புதுடெல்லி: ஜாபர் சாதிக்கின் ரூ.55 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் வழக்கில் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

உணவுப் பொருள் ஏற்றுமதி என்ற பெயரில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு போதைப் பொருள் கடத்தி ரூ.2,000 கோடி வரை வருமானம் ஈட்டிய குற்றச்சாட்டில் தமிழகத்தை சேர்ந்த 3 பேரை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் டெல்லியில் கடந்த பிப்ரவரி 24-ம்தேதி கைது செய்தனர்.

இதற்கு மூளையாக செயல்பட்ட திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக்கும் மார்ச் 9 அன்று கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். ஜாபர்சாதிக்கை போலீஸார் காவலில் எடுத்து விசாரித்தனர். அவர் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஜாபர் சாதிக் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு சொந்தமான ரூ.55 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. மேலும் ஓட்டல், ஆடம்பர பங்களா மற்றும் ஜாக்குவார், மெர்சிடிஸ் போன்ற 7 உயர் ரக வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோத பணபரிவர்த்தனை சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x