டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி வீட்டில் நள்ளிரவில் பாஜக உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் 550 வேட்பாளர்களுக்கான பட்டியல் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் இந்தியா முழுவதும் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி மாநிலங்களுக்குத் தக்கவாறு நிலைப்பாடு எடுத்து வருகிறது. மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வேண்டும் என்ற முழக்கத்துடன் பாஜக தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது. இதற்காக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளை ஒன்றிணைக்கும் வேலையில் பாஜக தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு டெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி வீட்டில் பாஜக உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. அப்போது 550 வேட்பாளர்களுக்கான பட்டியல் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த வேட்பாளர்கள் பட்டியல் தொடர்பாக பாஜகவின் மூத்த தலைவர்கள் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், கேரளா, தெலங்கானா, ராஜஸ்தான், கோவா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களின் வேட்பாளர்கள் தொடர்பாக விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.
ஆனால் தமிழ்நாடு, ஆந்திரா, பஞ்சாப் மாநிலங்களுக்கான வேட்பாளர்கள் தொடர்பாக இந்த கூட்டங்களில் விவாதிக்கப்படமாட்டாது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாகவே, முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட பாஜக ஆயத்தமாகி வருகிறது.