சாட்டை துரைமுருகனுக்கு முன் ஜாமீன்: உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு


சென்னை: நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகனுக்கு முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

விக்கிரவாண்டி இடைத்தோ்தல் பிரசாரத்தின்போது மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து நாம் தமிழா் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் அவதூறாக பேசியது தொடா்பாக திருச்சி சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.

சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டதற்கு திருச்சி மாவட்ட எஸ்.பி வருண்குமார் காரணம் என நாம் தமிழர் கட்சியினர் விமர்சித்தனர். இதையடுத்து திருச்சி எஸ்.பி. வருண்குமார் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரிலும் சாட்டை துரைமுருகன் மீது வழக்கு பதிவானது.

இந்த வழக்கில் சாட்டை துரைமுருகன் முன்ஜாமீன் கோரிய மனு மீது உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணை நடைபெற்றது. திருச்சி எஸ்.பி.வருண்குமார் பற்றி எந்த இடத்திலும், சமூக வலைதளங்களிலும் தவறாக பதிவிடவில்லை என்று சாட்டை முருகன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் வருண்குமாரின் சமூக வலைதள பதிவுகளில் அவதூறாக பதிவு செய்ததற்கு நாங்கள் பொறுப்பல்ல என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.

அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், சாட்டை துரைமுருகனுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

x